பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/96



நிறைந்த கவியே புதுவைக் கவி! அன்று புதுமைக் கவி! நேற்று முதுமைக் கவி! இன்று...... ?

தமிழகத்தின் மண்ணுக்கே ஒரு தனி வீரத்தைக் கற்பித்தவர் பாரதிதாசன் அவர்கள். 'கோழியும் தன் குஞ்சு தனைக் கொல்லவரும் வான்பருந்தைச் சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவி' என்பது அவரது கவிதை. உயிரினும் சிறந்தது தமிழ்’ என்பது அவரது கொள்கை.

தமிழ் தோன்றிய காலந்தொட்டு எத்தனையோ தமிழ்ப் புலவர்கள் இத் தமிழ் மண்ணில் தோன்றியிருக்கிறார்கள். ஆனல், தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்று கூறிய புரட்சிச் சொற்களைப் புரட்சிக் கவிஞரிடம் தான் கேட்டேன். இம்மண்ணில் இவர் போன்ற புலவர்கள் பலர் இனித்தோன்ற வேண்டும் என்பது என் விருப்பம்.

பாரதிதாசனை ஒரு தமிழ் மன்னன் எனலாம். இத்தகைய மன்னனை இந்தத் தமிழகம் வாழ்ந்தபோதும் சரியாக அறிந்து போற்றவில்லை; மறைந்தபோதும் சரியாக உணர்ந்துவருந்தவில்லை. இரண்டோர் இரங்கற் செய்திகளோடு அவரது வரலாற்றை முடித்துவிட்டது. இறந்தவர்கள் மீது கவிபாடி வெளியிடுவதற்காகவே சில பத்திரிகைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இறந்தவர்களுக்கு இரங்கற் செய்திகளைச் சொல்வதற்கென்றே சில பேர் வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள். இந்நிலைகள் திருந்திப் புலவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களை வாழ்த்த-போற்றத் தொடங்கிவிட்டால் தமிழகம்...?

பாவேந்தர் தமிழுக்குத் தொண்டர்! தமிழர்க்கு அன்பர்! புலவர்க்கு நண்பர்! புலவர் குழுவிற்குத் துணைவர்! கவிஞர்களுக்கு வழிகாட்டி! புரட்சிக் கவிஞர்களுக்குத் தந்தை! சீர்திருத்தவாதிகளுக்குத் தலைவர்! தமிழ்ப் பகைவர் முன்னே தோள்தட்டித் தொடைதட்டி நிற்போரெல்லாரும் அவர் உறவினர்.