பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/106



தம் அருந்தவச் செல்வராய மன்னர் மன்னன் என்னைக் கட்டிக்கொண்டு அழுதபோது என்னுள்ளம் பெரிதும் கரைந்து விட்டது. அவருக்கு எத்தகைய ஆறுதலையும் கூற அப்போது என்னால் இயலவில்லை. மேமாதம் முதல் தேதியன்று நாங்கள் இரங்கற் கூட்டம் ஒன்று கூட்டி எங்கள் துயரத்தை அங்கு வந்திருந்த மக்களுக்குத் தெரிவித்தோம். மன்னர் மன்னனுக்கும் ஆறுதல் கடிதம் ஒன்று வரைந்து அனுப்பினோம். அந்த அருந்தவச் செல்வரையும் அவர்தம் குடும்பத்தாரையும் ஆதரித்து ஆவண புரிய வேண்டுவது தமிழ் மக்கள் அனைவரது கடமையாகும். அவர் பெயரால் புதுவை மாநகரிலே ஒரு பல்கலைக் கழகம் ஏற்படுத்தினால், அது பலருக்கும் பயன்படும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் "வால்ட் விட்மன்" என்று பாரதிதாசனாரைப் பாராட்டியுள்ளார். பொதுமைப்பொழில்-புதுமை மலர்-தமிழ்த்தேன்-பாச் சுவை என்று திரு.வி.க. அவர்கள் பாவேந்தரைப் பாராட்டி மகிழ்ந்துள்ளார். நம் கவிஞர் பெருமானை உலக மாபெரும் கவிஞர்களுள் ஒருவராகவே மக்கள் என்றும் மதிப்பர். அவர் அயல்நாட்டில் பிறந்திருந்தால் தம் வாழ்நாளிலேயே நம் புரட்சிக் கவிஞர் நோபல் பரிசினைப் பெற்றிருக்கலாம். அவர் தம் பொன்னுடலம் மறைந்தாலும் புகழுடம்பு மறையாது. அவர் தம் பாக்கள் தேனினும் இனியவை. அவருடைய தமிழ்நடை மக்கள் உயிரையும், உடலையும் வளர்ப்பன. அவர்தம் புரட்சிக் கருத்துக்கள் உறங்கும் மக்களையும் விழிப்படையச் செய்வன. அவர்தம் நூற்கள் யாவும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க பெருமை வாய்ந்தன. அவரை நாம் மறந்தாலும் நம் தமிழ்மொழி மறவாது.

பாவேந்தர் பாரதிதாசர் தம் திருப்பெயர் வாழ்க!


11-5-1964