பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

◯

பாவேந்தருக்குப் பொற்கிழி அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அரும்பு இவர்; பேரறிஞர் அண்ணா மலர்.

'ரெட்டியார்' என்று பாவேந்தரால் பெருமதிப்போடு அழைக்கப்பட்டவர். இவரைப் 'பாவேந்தரின் சேலம் மாவட்டக்கிளை' என்று சொன்னால் கூடப் பொருந்தும். பாவேந்தரின் இயல் இசை நாடக வரலாற்றோடு பின்னிப் பிணைந்த முத்தமிழ் நண்பர் இவர்!

ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி கையெழுத்திடும் போது அடைப்புக்குறிக்குள் 'நாத்திகன்’ என்று போடும் வழக்கமுடையவன். இவரும் தம்மைப் 'பகுத்தறிவுவாதி' என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுபவர்.

எழுபது வயதை எட்டிப்பிடித்திருக்கும் இவர், வாழ் நாள் முழுவதும் பாவேந்தரின் சிந்தனையோடு வாழ்ந்து வருபவர்.

பாவேந்தரின் புகழைப் பரப்புவது-
இவர் தொழில்(Profession)
பாவேந்தர் பற்றிய பழைய நினைவுகளை
அசைபோடுவது-இவர்பொழுது போக்கு (Hobby)
பாவேந்தர் பரம்பரையோடு பழகுவது-
இவர் கேளிக்கை (Entertainment)

இசைப் புலவரான இவர் பாவேந்தரோடு பழகிய நாட்களில், அப்பாட்டு வீணையில் எழுந்த சில மெல்லிய அதிர்வுகளை இக்கட்டுரை நாடாவில் பதிவு செய்திருக்கிறார்.

O