பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131/இன்ப இரவு



விட்ட விஷயமும் இன்று விளங்கிற்று! திருமணத்தில் தாலிகட்ட மறந்தது போல் இருக்கிறது இந்த விஷயம். தோழர் கா. பெருமாளுக்கும் தெரிவிக்க. பிறருக்கும் தெரிவிக்க. 75 அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்.

பெண்ணுடன் 20-1-44ஆம் தேதி இரவு புதுவையில் இரயிலேறி, 21-1-44ல் திருச்சி ஜங்சனில் இறங்கி நேரே (காலை) வேதாசலம் வக்கீல் வீட்டில் இறங்கி -அங்கு- ரிஜிஸ்டர் முடித்து, உடனே மத்தியான சாப்பாடு கே. ஏ. பி. வீட்டில் முடித்துக்கொண்டு-மாலை கருணாநிதி★ பார்க்கில் காபி சாப்பிட்டு-இரவு சாப்பாட்டிற்கு உடனே அதாவது 21-4-80ஆம் தேதி இரவு கட்டிப்பாளையம் நோக்கிப் புகழூர் போகவேண்டியது. இந்தத்திட்டம் திருச்சியில் அனைவர்க்கும் தெரிவித்தாய் விட்டது.

நாமக்கல் நம் தோழர்கள் இவைகளை அறியும்படி செய்க. தாங்கள் மூவரும் திருச்சிக்கு வந்து அங்கிருந்து கட்டிப்பாளையத்திற்கு வந்து, திருமணத்தைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

தங்களன்புள்ள
பாரதிதாசன்

கடிதம் 21-4-14ஆம் தேதிதான் கிடைத்தது. ஆதலால் உடனே நானும், கிருஷ்ணராஜ், கா. கருப்பணன், திருச்செங்கோடு என்.கே.பி.வேல், கா. பெருமாள் முதலிய தோழர்களும் மாலை 6 மணிக்குக் கட்டிப்பாளையம் போய்ச் சேர்ந்தோம். மறுநாட்காலை (22-1-44) 9. மணிக்குச் சேலம் கல்லூரி முதல்வர் திரு. இராமசாமிக் கவுண்டர் தலைமையில் மணமக்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பேசினர்கள். முத்தமிழ் நிலையப் பங்குதாரர்களாகிய முருகு சுப்பிரமணியம் முதலிய தோழர்களும் வந்திருந்தார்கள். மக்கட் கூட்டம் நிறைந்திருந்தது.


★ இது திருச்சிராப்பள்ளிக்கழகத் தோழர் சங்கரன் வீடு.