பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது







புதுவையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வீட்டைப் பொது நினைவுச்சின்னமாக்கி, கவிஞரின் மனைவியாருக்கு மானியமும் உதவி, புதுவை அரசாங்கம் பெரும் சிறப்புச் செய்திருக்கிறது. தமிழ்மக்கள் பெருமகிழ்வு கொள்ளும் இந்த ஏற்பாட்டில் தமிழ்நாடு அரசும் பங்குகொண்டிருக்கிறது.

பாரதிக்குப் பின்னர் பாரதிதாசன் மரபு ஒன்றும் தமிழ்நாட்டில் உருவாகி, அவர் வழியில் இளங்கவிஞர் தலைமுறையொன்று வளர்ந்தும் வருகிறது. பாரதிக்குத் தாசன் என்று அவர் தம்மை அழைத்துக்கொண்ட போதிலும், பாரதியை சந்திப்பதற்கு முன்னமே புதுவை கனக சுப்புரத்தினம் பெரும் புலவராகவும் கவிஞராகவும் விளங்கியவர் தாம். பாரதியின் தொடர்பாலும் அவரிடம் சுப்புரத்தினம் கொண்டிருந்த பக்தியினாலும், பாரதிதாசன் எளிய இனிய தமிழ்க் கவிதைகள் எழுதும் பழக்கத்தை மேற்கொண்டார். அதில் வெற்றியும், பாரதியின் நேரிடையான பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவரானர்.

சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் பாரதியும் பாரதிதாசனும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தது அவர்களுடைய நட்பின் அடிப்படையாகும். புதுவையில் பாரதியாரின் மெய்காவல் பொறுப்பையும் மேற்கொண்ட வீரர்களின் தலைவராக விளங்கிய கனக சுப்புரத்தினம் பாரதிதாசனாக மலர்ச்சியடைந்தது இயல்பு.