பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/144




ஐந்தாறு கறுப்புச் சட்டைக்காரர்கள் வந்து 'திருலோக சீதாராம் வீடு இது தானா?’ என்று விசாரித்தார்கள் . முதலில் நான் திகைத்துப்போனேன். இந்தக் கூட்டத்தார் எதற்காக நம்மைத் தேடி வந்திருக்கிறார்கள்என்று.

’ஆம் இந்த வீடுதான். நீங்கள் விசாரிக்கும் ஆசாமியும் நான்தான். என்ன வேண்டும்?' என்று நான் கேட்டதும் அவர்களும் திகைத்துப் போனார்கள், தவறான விலாசத்துக்கு வந்திருக்கிறோமோஎன்று.

"திருலோக சீதாராமைச் சந்திக்கும்படி பாரதிதாசன் சொல்லியனுப்பினார். தாங்கள்தானா?’ என்று கேட்டார்கள்.

’வாத்தியார் அனுப்பியிருக்கிறாரா? அப்படியானால் நான்தான். கொஞ்சம் மேலே சென்று அமருங்கள். நான் அனுஷ்டானம் முடித்துக் கொண்டு வருகிறேன்’ என்றேன். வந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தோம். நிதிக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. தொகையும் வசூலாகிக் கொண்டிருந்தது குழுவிற்கு நான் செயலாளன். காதல் ஆசிரியர் ராமநாதன் பொருளாளர். அன்பில் தர்மலிங்கம், பராங்குசம் ஆகியோர் எங்களுடன் விழாக் குழுவில் இருந்தனர்.

திடீரென்று ஒர் அதிர்ச்சி ஏற்பட்டது. நாங்கள் குறித்திருந்த அதே நாளில் மணிவிழா தஞ்சையில் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுமென்றும், புரட்சிக் கவிஞர் நேரில் விஜயம் செய்வார் என்றும், அப்போது நிதியளிப்பும் பொன்னாடை போர்த்தலும் நடைபெறும் என்றும் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் பேரால் தினத்தந்தியில் ஒரு விளம்பரம் வெளியாயிற்று.

நாங்களோ திருச்சி தேவர்மன்றத்தில் விழா ஏற்பாடு செய்து, தீவிரமான நிதி வசூலிலும் ஈடுபட்டிருந்தோம்.