பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/146



இவர் சொல்லி அவருடைய அனுமதியைப் பெற்றிருப்பதாகவும் தெரிந்தது.

கவிஞர் எடுப்பார் கைப்பிள்ளை. எளிதில் யாரையும் நம்பி விடுவார். கடைசி வரையிலும் இந்தச் சுபாவத்தால் அவர்பட்ட அவதிகள் எண்ணில. மணிவிழா விஷயத்திலும் அவர் பல துன்பங்களுக்கு ஆளானார்.

விழாக்குழு முழுமையும் ராஜினாமா செய்து விட்டது. இந்தச் செய்தியைக் கவிஞரிடம் நேரில் சென்று தெரிவித்து அது வரையுள்ள கணக்குகளையும் ஒப்புவித்து விடுவது என்று முடிவாயிற்று. என் தலைமையில் ஒரு தூதுக் குழு புதுச்சேரி செல்வதென்று முடிவு செய்யப் பட்டது. என்னுடன் ஒரு சில நண்பர்கள் உடன் வந்தனர். இப்பொழுது அவர்கள் அனைவர் பெயரும் என் நினைவில் இல்லை. அன்பில் தர்மலிங்கம் இருந்தார்; நண்பர் பராங்குசம் இருந்தார் என்று நினைவு.

தமது வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் சிங்கம் படுத்துக் கிடப்பதுபோல் கவிஞர் சாய்ந்திருந்தார். நண்பர்கள் என்னை முதலில் உள்ளே போகச் சொன்னார்கள். வாசற்படியில் நுழைந்து இடைகழியில் சென்று அவரைப் பார்த்தவாறு நேரில் நின்று விட்டேன்.கிட்டே போகத் துணிவில்லை. சாய்ந்திருந்த கவிஞர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பிறகு 'ரிசைன் பண்ணிட்ட இல்லே’ என்று கேட்டார். ஆமாம்; ரிசைன் பண்ணிட்டேன்’ என்றேன். 'அப்ப, வச்சுட்டு போ, - என்றார். கையில் வைத்திருந்த விழாக்குழு சம்பந்தமான தாள்களையெல்லாம் அப்படியே வைத்துவிட்டு வாசற்பக்கமாகச் செல்லத் தொடங்கினேன்.

'முட்டாளு, இங்கேவா! உன்னையா போகச் சொன்னேன். உன்னை அப்படிச் சொல்வேனா? இந்த விஷயத்திலிருந்து நீ வெளியே போ என்று தான் சொன்னேன். நீ உள்ளே வா; இப்படி உக்காரு' என்று அருமையுடன் அழைத்தார். உள்ளே போனேன். தமது சாய்வு நாற்காலியின்