பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/168



காரரிடம் பூசலிடுவது சாதாரணமாம்! சென்னையில் கூட நான் அப்பண்பைக் கவிஞரிடம் கண்டேன்.

பின்னொருமுறை 1955இல் கவிஞரைக் கண்டேன். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அவர் பேசினார். திருக்குறளுக்குப் புத்துரை வகுத்துப் பேசினார் அவர். அவ்வுரை பற்றி அவரிடமே நேரில் கேட்டேன். 'திருக்குறள் உரையை ஏறத்தாழ எழுதி முடித்து விட்டேன்' என்றார், அவர். பின்னர் குயில் இதழில் "வள்ளுவர் உள்ளம்" என்னும் பெயரில் அவ்வுரை விட்டுவிட்டு வந்துகொண்டிருந்தது. அவர் எல்லாக் குறட்பாக்களுக்கும் முழுவதும் உரை எழுதியிருந்தாரோ என்பது எனக்கு ஐயமாக இருந்தது. அவ்வுரை சில குறள்களுக்கு மட்டும் குயில் இதழில் வந்தது. பாரதிதாசனார் சில குறள் அதிகாரங்களுக்கு மட்டுமே முழுமையாகவும் முறையாகவும் உரை எழுதியுள்ளார் எனவும் பிற அதிகாரங்களுக்குத் திருக்குறள் நூலின் ஓரங்களில் எழுதப்பட்ட குறிப்புக்கள் மட்டுமே உள்ளன எனவும் அண்மையில் அறிந்தேன். இன்னும் அவ்வுரை வெளிவரக் காணேன். ஏமாற்றமே எனக்கு ஏற்பட்டது.

பாரதிதாசனார் திருக்குறளுக்கு எழுதிய புத்துரை பகுத்தறிவு நோக்கிலும் தனித் தமிழர் நோக்கிலும் எழுதப் பட்டது. திருவள்ளுவர் திருக்குறளைச் சாங்கிய நூல் அடிப்படையில் எழுதியுள்ளார் எனக் கவிஞர் அடிக்கடி கூறுவதுண்டு. பகுத்தறிவு வாழ்வு மேற்கொண்டு தமிழாசிரியராகத் தொழில் புரிய இருந்த எனக்குப் பாரதிதாசனார் புத்துரையைப் பரப்புவது பணியாக இருக்க வேண்டும் என்று அன்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அவ்வாய்ப்பு இன்னும் எனக்கு வாய்க்காதது ஏமாற்றமாக உள்ளது. என் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுச் சேலம் கல்லூரியில் 1956இல் தமிழ் விரிவுரையாளன் ஆனேன். ஐந்தாண்டுகள் ஓடின. 1961 இல் சென்னைப் பல்கலைக்