பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169/இழந்த செல்வம்




கழகத்தில் அறிஞர் மு.வ. மேற்பார்வையில் தான் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்தேன். அவ்வாழ்க்கை மூன்றாண்டுகள். அப்போது பாரதிதாசனார் சென்னையில் நிலையாகத் தங்கித் தன் காவியமாகிய பாண்டியன் பரிசைப் பேசும் படமாக்கத் தொழிலகம் ஒன்றை அமைத்து முயற்சி மேற்கொண்டிருந்தார். என் அண்ணா முருகுசுந்தரத்துக்குப் பாரதிதாசனார் நன்கு அறிமுகம் ஆகியிருந்தார். அவர் வழியாக மருத்துவக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த என் தம்பிக்கும் அவர் அறிமுகம் ஆனார். கவிஞரின் தித்திப்புநீர் நோய்க்கு அவ்வப்போது என் தம்பியின் உதவி வேண்டியிருந்தது. இந்நிலையில் கவிஞருடன் மீண்டும் உறவுகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

1963இல் தியாகராயநகரில் கவிஞர் இல்லத்துக்குச் சென்றேன். அப்போது அவர் பங்களாவில் பின்கட்டில் குடியிருந்தார். பங்களா என்னும் வளமனையில் இருந்து விட்டுக் கட்டுபடியாகாத காரணத்தால் பின்கட்டுக்குக் கவிஞர் குடி வந்துவிட்டார் என்றறிந்தேன். மட்டமான குடிலும் இல்லை. வளமான குடிலும் இல்லை. பின்கட்டு வாழ்க்கை எனக்கு வருத்தம் தரவில்லை. வளமனையில் இருந்துவிட்டுக் கட்டாது பின்கட்டுக்கு வந்துவிட்டார் என்ற செய்திதான் என் நெஞ்சை உறுத்தியது. ’அவர் எண்ணி வந்தது கைகூடவில்லை; திட்டமிட்டது நடக்கவில்லை; ஆசை நிறைவேறவில்லை. ஏமாற்றம் அடைந்தார்; தவறுசெய்து விட்டார்; பட்டணம் வந்து கெட்டார்?’ என்ற கருத்துக்கள் என் உள்ளத்தில் ஒன்று ஒன்றாக வந்தன. இவையே உள்ளத்தை வருத்தின. இவை எல்லாம் உண்மையே. பேசும்படத்துறையில் இவை வழக்கம். அங்கு ஆறிடு மேடு மடுவும் போலாம் செல்வம். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் கவிஞர் இதில் இறங்கியதே கவலை தந்தது. நெடுந்தேர், கடல் ஓடியது போன்றிருந்தது; நாவாய் நிலத்தோடியது போன்றிருந்தது. கவிஞர்க்குக் காவியம் உரியது.