பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறம்

அரும்புகள் மொட்டுகள் மலர்கள், 'பாவேந்தர் நினைவுகள்' வரிசையில் வெளிவரும் இரண்டாவது நூல். இந்நூல்வரிசை என் 15 ஆண்டு முயற்சி. கவியரங்கம், சொற்பொழிவுகளுக்காக நான் எவ்வூர் சென்றாலும், அவ்வூரில் பாவேந்தரோடு பழகிய நண்பர் யாராவது இருக்கின்றாரா என்று அறிவது என் முதல்வேலை. அவ்வாறு யாரேனும் இருந்தால் அவருடைய இல்லம் சென்று பொறுமையாகக் காத்திருந்து அவர்கூறும் செய்திகளைக் குறித்துக் கொண்டுவருவது என் வழக்கம்.

நான் மேற்கொண்ட இம்முயற்சியிலிருந்து ஓர் உண்மை எனக்குப் புலனாயிற்று. சங்க காலந்தொட்டு இன்றுவரை பாவேந்தர் போல மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட கவிஞர் வேறு யாரும் இல்லை என்பதே அது! நான் இதைப் பாவேந்தர் மீது கொண்டிருக்கும் அளவிறந்த பற்றின் காரணமாகக் கூறியிருப்பதாகக் கருதக் கூடாது. நன்கு ஆராய்ந்துதான் இக்கருத்தைக் கூறுகிறேன்.

பாவேந்தர் கவிஞர் மட்டுமல்லர்! அவர் ஒர் அரசியல்வாதி சீர்திருத்தவாதி; ஆசிரியர்; பத்திரிகாசிரியர்; நாடகாசிரியர்; திரைப்பட எழுத்தாளர்; பதிப்பகர்;