பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/50



அந்தநண்பர்கள் நான் புலியையே கொண்டுவந்துவிடப் போகிறேன் என்று பயந்தோ என்னவோ, "ஊஹூம். அதெல்லாம் வேண்டாங்கையா! நீங்க சொன்னப் போதாதா?" என்று கையைப் பிசைந்து கொண்டு கவிஞரைப் பார்த்து ஒரே ஒற்றுமையாகக் குழைந்தனர்.

அந்த ஒல்லியுடம்புச் சைவ நண்பரும் ஏனையோரும், "ஐயா! உங்கள் வீட்டுச் சுவையான சாப்பாட்டைச் சாப்பிட எங்களுக்கு விருப்பந்தான்; ஆனால் வண்டிக்கு நேரமாகி விட்டது!" என்று சாக்குப்போக்குக்கூறித் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று புறப்பட்டு விட்டனா்.

பாவேந்தர்
படமெடுக்க வந்ததேன்?

ஒருநாள் நள்ளிரவு 1½ மணி. தியாகராய நகர் இராமன் தெருவிலுள்ள பாரதிதாசன் படநிறுவனத்தின் மூலை அறையொன்றில் 100 வாட்ஸ் மின்விளக்கு ஒன்று ஒளிக்குழம்பை உமிழ்ந்து கொண்டிருந்தது. அது பாவேந்தரின் தனியறை. கட்டிலின் மேல் கால்களை மடித்து வைத்துத் தமது படர்ந்த மார்பை இடதுகையால் தடவிக் கொடுத்தபடி புத்தரைப்போல் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறார் கவிஞர். மேலாடை இல்லாத அவர் மாநிற மேனியும் அறிவுக் கண்களும் ஆற்றல் மிக்க அந்த விளக்கொளியில் மின்னிக்கொண்டிருந்தன.

அந்த அமைதியான நள்ளிரவில் அவர் எடுக்கவிருந்த 'பாண்டியன் பரிசு'த் திரைக்கதைக்கான உரைநடையைச் சொல்லிக்கொண்டு வருகிறார். 'கணீர் கணீர்’ என ஒலிக்கின்ற அவருடைய கம்பீரக் குரலிலே மூப்பின் காரணமாகச் சில நேரங்களில் கரகரப்புக் கலக்கிறது. சிங்கத்திற்கு முன் அமர்ந்திருந்த சுண்டெலியைப்போல் அவரெதிரில் அமர்ந்து, அவர் விடுவிடென்று சொல்வதை நான் வேகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். திடீரென அவரின் ஆர்ப்பொலி தடைப்படுகிறது. அவரு-