பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

O


இவர் பாவேந்தர் குடும்பக் காவியத்தின் முதற்காதை; பாவேந்தர் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி; தமிழுக்குப் பிறந்து தமிழுக்கே வாழ்க்கைப்பட்டவர்.

'குடும்பவிளக்கு' தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் என்று அந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்படும் தலைவி இவரே!

அறுபதாம் அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் இவர், வீட்டு வேலைகளைச் சுறுசுறுப்போடு செய்யும் காட்சி, 'பறந்தனள் பச்சைப் பசுங்கிளி ...' என்ற பாவேந்தர் பாட்டை உள்ளத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது.

குடும்பவிளக்கில் படம் பிடித்துக் காட்டப்படும் விருந்தோம்பும் அழகை, இன்றும் இவர் வீட்டுக்குச் சென்றால் சுவைத்து மகிழலாம்.

புக்ககத்திலிருந்து புதுவை வரும் இவரைப் பெருமாள் கோவில் தெருக் கோடியில் கண்டால் 'பழனியம்மா! குடும்பவிளக்கு வருது!’ என்று பாவேந்தர் பரிவோடு குறிப்பிடுவதுண்டு.

சரசுவதிஅம்மையார், பனித்த கண்களோடு தம்தந்தை யாரை இக்கட்டுரையில் நினைவு கூர்கிறார்.

O