பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61/என் தந்தையார்


'அப்பளம் கசக்குது' என்று கூப்பாடு போடுவார். சாப்பாட்டுக் கிண்ணி மேலே பறக்கும். பிறகு என்னைக் கூப்பிடுவார். அப்பளம் ரசத்துக்குக் கசக்கும். அது என் தாயார் கவனத்துக்கு வருவதில்லை. நான் மீண்டும் போய்ப் பருப்புத் துவையல் அரைத்துக் கொடுத்து சமாதானம் செய்தால்தான் சாப்பிடுவார். பருப்புத் துவையலோடு அப்பளத்தைத் தொட்டுச் சாப்பிடச் சொல்லுவேன். 'ஆமாம்மா! இப்பத்தான் நல்லாருக்கு’ என்பார் தந்தை.

இரவு நேரங்களில் எழுதும்போது நிறைய ரொட்டியும் ஜாமும் வேண்டும். காலையில் அவர் அறைக்குள் நுழைந்தால் சிகரெட் துண்டும், சாம்பலும், நெருப்புக் குச்சியுமாகக் கிடக்கும். அவர் எழுதிய கையெழுத்துப் படிகளும் இறைந்து கிடக்கும். சிலசமயம் அவர் கையெழுத்துப் படிகளை எடுத்துப் பார்த்தால் ஒன்றின்மேல் ஒன்று ஏறியிருக்கும்.

"என்னப்பா இப்படி எழுதியிருக்கறீங்க?' என்று கேட்டால், விளக்கிலே எண்ணெய் தீந்து போச்சு. கூப் பிட்ட...யாரும்வரலை. இருட்டிலேயேஎழுதிமுடிச்சுட்ட...” என்று கூறுவார். சுவாரசியமாக எழுதும் நேரங்களில் குப்புறப்படுத்து நெஞ்சுக்குத் தலையணையைத்தாங்கலாக வைத்துக்கொண்டு எழுதுவார். சிலசமயங்களில் எழுதும் போது தாகமாக இருக்கிறது என்பார். சீரகம் போட்டுக் காய்ச்சி வடித்த நீரைக் கொண்டுபோய்க் கொடுத்தால் குடித்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்குவார்.

அதிகாலை தொடங்கி ஓய்வொழிச்சல் இன்றி வேலை செய்யும் என் தாயார் அசதி காரணமாக இரவு எட்டு மணிக்கே படுத்துக்கொள்வார். படுத்தால் மீண்டும் அவரால் எழுந்திருக்க இயலாது. ஆனல் தந்தையாரோ இரவில் எழுதிக்கொண்டிருக்கும்போது பசியென்பார். நான் எழுந்து ஏதாவது தின்பண்டம் செய்து கொடுக்க வேண்டும். இரவு 1 மணிக்குப் பூசணி அல்வா கேட்பார்