பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குப்புறப்படுத்து மார்புக்குத் தலையணையைத் தாங்கலாக வைத்துக்கொண்டு பாவேந்தர் எழுதும் வழக்கமுடையவர் என்ற செய்தியைப் பலரும் கூறுகின்றனர். ஒரு குளித்தலை நண்பர் அந்த நிலையிலேயே பாவேந்தரைப் படமெடுத்திருக்கிறார். அந்தப் படத்தைப் பார்க்கக் கேட்டபோது, "எங்காவது கிடக்கும்; தேடிப்பார்க்கணும்" என்று அசிரத்தையாகக் கூறிவிட்டார்.

பாவேந்தரோடு பழகிய நண்பர்களில் நூற்றுக்கு எண்பது பேர் தங்கள் இல்லத்தில் அவருக்கு விருந்து வைத்த தைப்பற்றியும், அவரது நடையுடை பாவனை பற்றியும் மேலோட்டமான செய்திகளையே கூறுகிறார்கள். பாவேந்தர் வாழ்வில் இடம்பெற்ற கலை, இலக்கியம், அரசியல், சீர்திருத்தம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கூறுபவர் மிகச் சிலரே! பாவேந்தர் அவ்வப்போது கூறும் நுட்பமான இலக்கியச் செய்திகளைப் புரிந்து கொள்ளவும், அவற்றை நினைவில் வைத்திருந்து கூறவும் ஓரளவு தகுதி வேண்டும். அத்தகைய தகுதிபெற்ற நண்பர்கள் கூறும் செய்தி சிந்தனைக்கு விருந்தாக உள்ளது.

கவிஞர்களுக்கே உரித்தான-சாதாரண மக்களிடமிருந்து தம்மைத் தனிப்படுத்திக் காட்டும்படியான-பண்புகளும் விசித்திரமான போக்குகளும் பாவேந்தரிடம் நிறைய உண்டு. அவற்றுள் சிலவற்றை நான் பாவேந்தர் நினைவுகள் முதல்பகுதியில் எழுதியிருக்கிறேன். இந்த நூலில் பாவேந்தரின் மக்கள் சில செய்திகளை எழுதியிருக் கின்றனர். பாவேந்தரை அருகிலிருந்து ஆய்ந்தார்க்கே இது போன்ற செய்திகளைக் கூற இயலும்.

கவிஞர்கள் சுரதாவும், வாணிதாசனும், புதுவைச்சிவமும், பொன்னடியானும் பாவேந்தரின் பார்வையில் வளர்ந்த மாணவர்கள். இவர்களும் கவிஞர்கள் ஆகையால், பாவேத்தர் பற்றிப் புலமை நுணுக்கத்தோடு கூடிய அரிய பல செய்திகளைக் கூறியிருக்கிறார்கள்.