பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது








நான்கு வயதுக் குழந்தையாக நானிருந்த போது, ‘’நீ சாமிக்குப் பயப்படுவாயா? எனக்குப் பயப்படுவாயா?’’ என்று ஒரு பையன் என்னைக் கேட்டான். அதை நான் என் தந்தையாரிடம் சொன்னேன். உடனே எவனுக்கும் நான் பயப்பட மாட்டேன்' என்று விடையிறுக்கச் சொல்லி எனக்கு மனவலிமை அளித்தவர் கவிஞர். நெஞ்சுரமிக்க அவரை நினைக்கும்போதெல்லாம் அவரின் எழுத்தாற்றலுக்கு வித்தாக அமைந்த நிகழ்ச்சிகள் இன்றும் என்னுள்ளத்தில் படமாடிக் கொண்டிருக்கின்றன.

தம் இளமைப்பருவ நண்பர்களைக் கண்டாலே கவிஞருக்கு எப்போதும் அளவிலா மகிழ்ச்சி. புதுவையில் நீண்ட காலத்துக்கு முன் வேலை நிமித்தமாகப் பிரிந்துவிட்ட அரங்கநாதனை மீண்டும் நெட்டப்பாக்கம் சிற்றூரில் சந்தித்த போது துள்ளிக் குதித்தார் கவிஞர். அரங்கநாதன் இளைஞராக இருந்தபோது நாடகங்களில் அனுமன் வேடம் ஏற்பது வழக்கம். அதனால் 'குரங்கு ரங்கநாதன்’ என்று நண்பர்களால் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார். இவ்வடைமொழிக்கு வேறு ஒரு காரணமும் உண்டு. கவிஞர் தம் குழாத்துடன் சிறுவயதில் செய்த துடுக்குத் தனங்களில் இந்தஅரங்கநாதனுக்கும் முக்கியப் பங்குண்டு.