________________
64 மூடிக்கொண்டன. திரும்பிப் பார்த்தேன்; உலகநாதர் நின்றார். நின்றது மட்டுமல்ல ; கலகலவெனச் சிரித்தார். "தோற்றாய் குமுதா, தோற்றாய்” என்று ஒரு பிசாசு அலறுவது போல் இருந் தது. என் நிலை தவறிவிட்டது. உலகமே கிறுகிறுவெனச் சுழன்றது. ஆகாய வெளியிலே ஒரு பயங்கரச் சப்தம் கேட்பது போல் தெரிந்தது! பல மின்னல்கள் ! இடி முழக்கங்கள் ! அதற்குப் பிறகு என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. கண்ணை விழித்துப் பார்த்தேன். கட்டிலில் படுத்திருப்பதாக உணர்ந்தேன். அருகில் உலகநாதர் சயனித்திருந்தார். ஏதோ சூரிய மண்டலத்தையே சுற்றி வந்துவிட்டவர் போலச் சிரித்தார். என்னென்னவோ பேசினார். எதுவும் என் காதில் விழவில்லை. காமாந்தகாரப் பூதத்தின் இரத்தந் தோய்ந்த நகங்களால் என் இதயம் கிழிக்கப்பட்டு விட்டது. அதனுடைய கடைவாய்ப் பற் களின் கூர்மை என்னைப் பிளந்தெறிந்தது. நான் இப்பொழுது ஒரு வேசி ! விபச்சாரி ! குமுதாவின் உடலை ஒருவன் ருசி பார்த்து விட்டான். என் உள்ளத்தை அந்த உன்மத்தன் அடிமைப்படுத்த வில்லை ; அதற்காக நான் பரிசுத்த மனுஷி என்று பறைசாற்றிக் கொள்ள முடியுமா? இராமாயணத்திலே சீதை, "ராமப்பிரபூ ! இராவணன் என் உடலைத் தீண்டினானே தவிர உள்ளத்தைத் தீண்டவில்லை” என்று கூறித் தப்பித்துக்கொண்டாளாம். அதுபோல வீரனிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கவில்லை. இன்னொருவன் தொட்ட குமுதா வைக் கபடமற்ற வீரன் தொடுவதா ? அன்னியனுடைய எச்சிலை அத்தானுக்கு வழங்குவதா? பக்கத்திலே இருந்தான்; பார்த் தேன். வெற்றிச்சிரிப்புச் சிரித்தான்; நான் வெகுளவில்லை. அணைத்தான்; அடங்கிவிட்டேன், பலாத்காரச் செயல்தான் ! தடுக்கும் தைரியம் எனக்கு வரவே இல்லை. "ஏண்டி குமுதா ! உன்னை மீறியா ஒன்று நடந்துவிடும் ? என்று கேட்பீர்கள் ; உண்மைதான். ஆனால், நடந்துவிட்டதே, என்ன செய்வேன்? புளிப்புக் கலந்த பாலாகிவிட்டேன் ; விஷங்கலந்த உணவாகி வீட்டேன். ஆனால் நான் விபச்சாரியாக வாழ நினைக்கவில்லையே! அதற்காக நீங்கள் இரங்கலாகாதா ? என்னை மன்னிக்கக்கூடாதா? என் கடிதத்தை மறுமுறையும் படித்துப் பாருங்கள். கண்ணம்மா என்னை வஞ்சித்தாள் ! 'பெரிய இடத்துப் பெண்மணி' இந்த வேலை செய்தாள் ; செல்வந்தர் வீட்டுச் சீமாட்டி சதி புரிந்தாள். தன் கணவனைத் தாசிவீட்டுக்குத் தூக்கிச் சென்றதாக நான் நளாயினி கதை படித்ததுண்டு. இந்தக் கலியுக நளாயினி என்னையே அவள் கணவனுக்குக் காணிக்கையாக்குவாள் என்று நான் கருதவில்லை.