பக்கம்:அருளாளர்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 * அருளாளர்கள்



மூன்று மன்னர்கள் பெயரிலும் பாடல் பாடியது போன்ற பல திருவிளையாடல்களை நம்பி சொல்லியிருந்தாலும், பரஞ்சோதியார் சொல்லவில்லை. ஆகவே இந்தத் திருவிளையாடலில் கூட காலாந்தரத்தில் மாறுபட்டக் கதைகள் தோன்றியிருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் ஏதோ பரஞ்சோதியார் காலத்திலோ, நம்பி காலத்திலோ இந்த வரலாறுகள் தோன்றின என்று நினைத்தால் அது தவறு. மிகப் பழங்காலத் தொட்டு இவைகள் இருந்திருக்கின்றன என்று நினைக்க வேண்டி இருக்கிறது. மிகப்பழமையானதான சிலப்பதிகாரத்தில், 'வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது; கடல் சுவற வேல் விட்டது; இந்திரன் முடிமேல் வளை எறிந்தது'முதலிய திருவிளையாடல்கள் பேசப்படுகின்றன. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரக் காரரே,

“அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி

வடிவே லெறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’

(சிலம்பு 1, 17)

என்று பாடுவார். வடிவேல் எறிந்த வான் பகை’ என்று மிக அழகாக, கடல் சுவற வேல் விட்ட படலம்’ என்று பரஞ்சோதி அடிகளார் சொன்ன திருவிளையாடலை இளங்கோவடிகள் பேசுகிறார்.

“திங்கட் செல்வன் றிருக்குலம் விளங்கச்

செங்கணா யிரத்தோன் றிரல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி"

- - (சிலம்பு 1, 23)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/117&oldid=1291594" இலிருந்து மீள்விக்கப்பட்டது