பக்கம்:அருளாளர்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் *125

குட்டிகள் தாய் இல்லாமல் - கண் திறவாத பன்றிக் குட்டிகள் - அலறுகின்றன. இறைவன் பரம கருணையோடு அவற்றை ஆட்கொள்கிறான். எப்படி? அனைத்தையும் மோட்சத்திற்கு அனுப்பியிருக்கலாம். இந்நாட்டவர் அதைப் பெரிதாகக் கருதவில்லை. உயிர்கள் எந்த நேரத்தில் எந்தத் துன்பத்தை அனுபவிக்கின்றனவோ, அந்தத் துன்பத்தை அந்த நேரத்தில் போக்குவது தான் இறைவனுடைய கருணை. இப்போது பன்றிக் குட்டிகளுக்குத் தேவை தாய்ப்பால். எனவே இறைவன் தாய்ப் பன்றியாக வந்து பால் கொடுத்தான் என்று சொல்வதுதான் இந்த நாட்டுக் காரர்களுடைய மிக உயர்ந்த தத்துவம். அது இறைவனுடைய பரம கருணை. இரங்கி வந்து அருள் செய்கின்ற நிலையை 'செளலப்யம்’ என்று சொல்லுவார்கள். அந்த செளலப்யத்தைத்தான் சைவர்களும், வைணவர்களும் மிகுதியாகப் போற்றினார்கள். இறப்ப உயர்ந்தவனாகிய பரம் பொருள், இறப்ப இழிந்ததாகிய உயிர்கள் மாட்டு கருணை கொண்டு, இறங்கி வந்து அருள் செய்கின்ற அடிப்படையை செளலப்யம் என்று சொல்லுவார்கள். அந்த செளலப்யத்திற்கு எடுத்துக் காட்டாகத்தான் திருவிளையாடலில் 64 கதைகள் வருகின்றன.

 கரிக்குருவிக்கு உபதேசம் செய்தது; பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்தது, இப்படிப்பட்ட சாதாரண உயிர்களிடத்தில் பரம்பொருள் இறங்கி வந்து அருள் செய்கிறான் என்பதைக் காட்டுவது தான் திருவிளை யாடலின் அடிப்படையான தத்துவம் என்பதை உணர்ந்து கொண்டால், பிறகு இந்தக் கதைகளிலே நமக்கு மலைப்பு தட்டுவதற்கு ஒன்றும் இல்லை. சாதாரண நிலையில் இருக்கின்ற பன்றிக் குட்டி கரிக்குருவி நிலையிலிருந்து மிக உயர்ந்த அறிவாளிகள் வரை இடம் பெறுகிறார்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/136&oldid=1291880" இலிருந்து மீள்விக்கப்பட்டது