பக்கம்:அருளாளர்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமூலர் 5

நாளும் நாளும் செத்துக் கொண்டிருக்கிற நாம் நிலையா மையை உணராமல் இருப்பது வருந்தத் தக்கதே! இதனையே வள்ளுவப் பெருந்தகை,

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்அஃது உணர்வார்ப் பெறின்’

                   (குறள்-334)

என்று கூறிப் போனார். எத்துணைச் சிறப்புடன் வாழ்ந்தாலும் முடிவில் காலன் வெற்றிகொண்டு விடுகிறான். அவனை எதிர்த்து வெற்றி கண்டார் ஒருவரும் இலர். ஊருக்குப் பெரியவர் தான். நாட்டாண்மைக்காரரும் அவரே. பெருஞ் செல்வத்தில் புரண்டார். சிவிகை அல்லது பல்லக்கில் அல்லாமல் எங்குஞ் சென்று அறியார். ஆனால் முடிவில்,

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன் காட்டுச் சிவிகையொன்(று) ஏறிக்

                        கடைமுறை

நாட்டார்கள் பின்செல்ல முன்னே

                      பறைகொட்ட

நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

                  (திருமந்- 153)

இப்படி பாடை மேல் போகின்றவரைக் கண்டால் அப்பொழுதாவது உண்மை தெரிகிறதா? தெரிந்தால்தான் நிலையாத வாழ்க்கையில் ஓரளவு பற்றை விட்டு நிலைத்தவற்றைத் தேட உலகம் முற்படுமே!

மெய்ப்பொருள் அறிவு பெற்ற திருமூலர் ஒரு பேருண்மையைக் கண்டார். உலகம் தோன்றிய நாளில் இருந்து உயிர் வருக்கங்கள் தோன்றி வாழ்ந்து அழிகின்றன. உயிரினம் ஒரு பெரிய சங்கிலித் தொடர்போல் இருந்து கொண்டு இருக்கிறது. தோன்றி அழியும் இவ்வுயிர் இனத்தில் ஏதாவது நிலைபெற்ற ஒன்று உண்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/14&oldid=1291370" இலிருந்து மீள்விக்கப்பட்டது