பக்கம்:அருளாளர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமூலர் 7

இதற்கும் அவ்வினாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? இன்னும் ஒரு படி சென்றால் உண்மை விளங்கிவிடும்,

உயிர்கள்தோறும் தங்கி அதனை இயக்கும் ஆற்றல் எது? எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிக்கின்ற ஓர் ஆற்றல் எது? அத்தகைய பேர் ஆற்றலையே 'கடவுள்’ என்று உலகம் குறிப்பிடுகிறது. கடவுள் என்றால் கடந்து நிற்பவன் என்பதுதானே பொருள்? கடந்து நிற்றல் எப்பொழுது? கலந்து நின்ற பிறகுதானே கடந்து நிற்றல் கூடும்? எனவே, எல்லா உயிர்களிலும் கலந்தும், அவற்றைக் கடந்தும் நிற்கும் ஒருவனையே கடவுள் என்று குறிப்பிடுகிறோம். இப்பொருளுக்கு, வாக்கு மனம் கடந்த இதற்கு, ஒவ்வொரு மொழியிலும் ஒரு பெயரிட்டு உள்ளனர். குணம் கடந்த அதற்குக் குணம் கற்பித்தனர். அவ்வாறு இட்ட பெயர்களுள் இத்தமிழ் நாட்டார் இட்ட பெயர் ‘சிவம் என்பதாகும். எல்லாவற்றுள்ளும் கலந்து நிற்கும் பொருளுக்குச் சிவம் என்று பெயர் இட்டனர். சிவம் என்றால் பொருள் என்ன? அன்பு என்பதன் மறுமொழியே சிவம் என்கிறார் திருமூலர். ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் காணப்படுகிற ஒற்றுமை எது என்று கேட்டால் ‘அன்பு’ என்று விடை கூறிவிடலாம். உயிர் வருக்கங்கள் பலவேறாகக் காட்சி அளித்தாலும் அவை அனைத்தையும் ஒன்றுபடுத்தும் சக்தியாக அன்பு இருத்தலை அறிகிறோம். அன்பே கடவுள் என்றும் திருமூலர் கூறுகிறார். எனவே, கடவுளை அடையச் சிறந்த வழி யாது என்றால் அன்பு நெறியே என்ற விடை கிடைக்கும். அன்பு வடிவாகிய இறைவனை அடைய அன்பு வழியை விடச் சிறந்த ஒன்று இருத்தற்கில்லை. இக்கருத்து திருமூலர்க்கு முன்னும் பின்னும் இந்நாட்டார் பலருங் கூறிய ஒன்றாகும். 'பக்தி வலையிற் படுவோன் காண்க’,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/16&oldid=1291383" இலிருந்து மீள்விக்கப்பட்டது