பக்கம்:அருளாளர்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. திருமந்திரம் - பொருள்நிலை

  உயர் விஞ்ஞானம் அல்லது கணிதம் கற்கின்றவர்கள் வைத்திருக்கும் நூல்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தால் நம் போன்றவர்கட்கு அந்நூல்கள் புரியாத புதிராகவே இருக்கும். அவற்றிலுள்ள எழுத்துக்களும், எண்களும் நாமறிந்தவையே. எனினும் அவைகளின் கருத்துக்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும். ஆனால் அத்துறைகளில் பயின்றவர்கட்கு அந்நூலில் கூறப்பெற்ற கருத்துக்கள் அங்கை நெல்லிக்கனியாக விளங்கும். என்போன்ற சிலருக்கு திருமந்திரம் மந்திரமாகவே (மறை மொழியாகவே) உள்ளது.
 இந்நிலையிற்கூட ஓர் உண்மையை மறவாமற் காண்டல் வேண்டும். எத்துணைதான் பதி, பசு ,பாச ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் அவ்வாராய்ச்சி காலத்தோடு ஒட்டிவாராக்கால் ஒரு சிலருக்கே பயன்படுவதாக முடிந்துவிடும். உண்மையைக் கூறவேண்டுமானால் நம் நாட்டில் இன்றைய நாளில் சமயங்கள், அவை பற்றிய பிரச்சாரம் என்பவை எந்நிலையில் உள்ளன. சைவம் என்றால் என்ன என்பதை அறியாதவர்கள் இடமன்றோ நம் சமயத்தைச் சென்று பரப்ப வேண்டும்? அதன் எதிராக அதுபற்றி அறிந்தவர்கள், அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர் இவர்கள் இடையே சென்று ‘சைவத்தின் மேற்சமயம் வேறில்லை' என்று கூறுவதன் நோக்கம் யாது?.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/20&oldid=1291620" இலிருந்து மீள்விக்கப்பட்டது