பக்கம்:அருளாளர்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 * அருளாளர்கள்


எனவே வள்ளலார் புதுமை புகுத்தவில்லை, மறைந்து போன பழைய உண்மைகளை வெளிக் கொணர்ந்து மிக்க தைரியத்துடன் வெளிப்படுத்தினார் என்று சொல்வதில் தவறு இல்லை. இதுதான் வள்ளலாரைப் பொறுத்த மட்டில் மிகப் பெரிய பிரச்சினைக்கு இடமாக ஆகிவிட்டது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெருமக்கள்-ஆறுமுக நாவலர் போன்றவர்கள் அந்தப் பழமையில் ஊறி, அந்த ஆகம வழிபாட்டு முறையில் தான் வழிபாடு செய்ய வேண்டுமென்று நினைத்தார்கள். சைவ வினாவிடை என்ற நூலை அவர் எழுதியிருக்கின்றார். அதைப் பார்ப்போமேயானால் சிறிய சிறிய காரியங்களுக்கெல்லாம் அவர்கள் எவ்வளவு பெரிய மதிப்பைத் தந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. திருநீற்றுப் பையினுடைய அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மிகப் பெரிதாகப் பேசுகின்றார் நாவலர். கிரியைகள் அல்லது சடங்குகள் ஆகியவற்றை செய்வதன் மூலமே பக்தியை வளர்க்க முடியும் என்று கருதினார்கள். அந்த வழிமுறை பயன்பட வில்லை என்பதை 19ஆம் நூற்றாண்டில் காணுகிறார் வள்ளற்பெருமான். இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால் அடிப்படை மறைந்து போய்விடும். ஆகவே இவற்றை ஒதுக்கினாலொழிய வேறு வழியே இல்லை என்பதை மிக அற்புதமாகக் கண்டு அவற்றுக்கு அடிப்படையாக இருக்கின்ற விக்கிரக வழிபாட்டையும் மெல்ல தவிர்க்கத் தொடங்குகிறார் என்பதை அறிய முடிகிறது.

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

திருஅருட்பா-3767)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/225&oldid=1292372" இலிருந்து மீள்விக்கப்பட்டது