பக்கம்:அருளாளர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 அருளாளர்கள்

  தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
      தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”
                                                              (திருமுறை: 6, 25, 7) 

இங்குக் கூறப்பெற்ற நிலைகளையெல்லாம் கடந்து இறுதியடியில் கூறப்பெற்ற 'தலைப்பட்டாள் தலைவன் தாளே' என்ற நிலையை அடையும் பொழுதுதான் 'தானும் யானும் எல்லாம் ஒன்றாய் கலந்தொழியும் நிலை' ஏற்படுகிறது. மேலும், தன்னை மறத்தலானும் தன்னாமம் கெடுதலானும் அகங்காரம் என்று கூறத்தக்கது எதுவுமே அங்கு எஞ்சுவதில்லை. இறைவன் உறையும் கோயிலாகவே இப்பெரு மக்களுடைய உடலும் அமைந்து விடுகிறது.

        ‘என்ஆகம் உள்புகுந்து ஆண்டு கொண்டான்’ 
                                                              (திருமுறை: 8, 13, 17) 
        ‘நான் ஆர், ஆடி அணைவான்? ஒரு
              நாய்க்குத் தவசிட்டு இங்கு
         ஊண்ஆர் உடல் புகுந்தான், உயிர்
             கலந்தான், உளம் பிரியான்’
                                                               (திருமுறை: 8, 34, 1)

என்ற அடிகளில் இறைவன் தம் உடலை இடமாகக் கொண்டதை மணிவாசகர் பேசுகிறார். இதே கருத்தை ஆழ்வார் கூறும் பொழுது நானாக அவனை என்னுள் இருத்துவன் என்றுகூட முற்படவில்லை. (அவ்வாறாயின் அதுவும் ஓரளவு அகங்காரத்தின் பாற்படும்) தானே வந்து என்னையும் மீறி என்னுட் புகுந்து என் உடலைத் தன்னிருப்பிடமாகக் கொண்டான் என்ற கருத்தில்,

         ‘யான் எட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் 
          தான் எட்டி வந்து, என்தனி நெஞ்சை வஞ்சித்து
          ஊண் எட்டி நின்று, என் உயிரில் கலந்து, இயல் 
          வான் எட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?'
                                                                  (நாலா 2154)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/87&oldid=1291998" இலிருந்து மீள்விக்கப்பட்டது