பக்கம்:அரை மனிதன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அரை மனிதன்


 வேண்டாம் அந்தச் சம்பந்தம் என்று சொன்னேன். அவன் கேட்டால்தானே! பெண் அவனுக்குப் பிடித்து விட்டதாம். நானும் நினைத்துப் பார்க்கிறேன். ஏன் அவன் அப்படிச் சொல்கிறான். அதாவது அவன் கற்பனைக்கு ஏற்றவளாக இருந்தாள். என்ன கற்பனை!

அவன் மேலே எப்படித் தப்பு சொல்ல முடியும். இங்கே அவன் என்னத்தைக் கண்டான். ஏதோ வேளைக்குச்சோறு; அதுகூட பிரமாதம் என்று சொல்லமுடியாது. போட்டுக் கொள்ள சட்டை; படிப்புக்குச் சம்பளம்; இருக்கிறதுக்கு ஒன்றும் வசதியான வீடு இல்லை. விளம்பரப்படுத்துவதற்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கமுடியாது.

அந்த இடம் அவனுக்கு நல்ல விளம்பரத்தைத் தந்தது. காரே தருகிறார்கள் என்று சொன்னார்கள். போகட்டும் ஒரு புதிய காராவது தந்தார்களா? அதுவும் இல்லை. அதே பழைய கார்; புதிய 'பெயிண்டு'. அது தான் என் காலைக் கடித்ததே அதே கார் தான். நான் எனக்குள் சிரித்துக்கொள்வேன். தம்பி அந்தக் காருக்குச் சொந்தக்காரன் ஆனான்.

நான் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தம்பிக்குக் கல்யாணம் ஆயிற்று. அவனைப் படிக்க வைத்தோம். இந்தக் குடும்பத்துக்கு அவன் பயன்படவில்லை. அவள் எங்கள் வீட்டில் இருக்கமுடியாது என்று அவனே சொல்கிறான். போகட்டும்; அவர்கள் வீட்டில்தான் எங்களை அழைத்துப் போவதுதானே. அந்த இடத்துக்கு நாங்கள் எப்படிப் போக முடியும்?

நொண்டி நாயை யாரும் எளிதாகக் கல்லெடுத்து அடிப் பார்கள். என்னைக் கேவலப்படுத்துவதற்கு வேறு ஒன்றும் தேவை இல்லை. போயும் போயும் நான் அவன் கையேந்தி நிற்க என்னால் எப்படி முடியும்? அப்பாவுக்கு அச்சுத் தொழில்; அம்மாவுக்கு அடுப்பங்கரை; தங்கைக்கு அழுகை; எங்களை விட்டுப்பிரியாத உடன் பிறப்புகள் இவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/12&oldid=1461918" இலிருந்து மீள்விக்கப்பட்டது