பக்கம்:அரை மனிதன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

13


 எப்பொழுது நான் பிறரை எதிர்பார்க்கும் நிலையை அடைந்து விட்டேனோ அப்பொழுதே மற்றொருத்தி என்னை எதிர் பார்த்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்டேன்.

வயிற்றுப் பிழைப்புக்காக நான் என்றுமே கவலைப்பட்டதில்லை; கவலைப்படப் போவதும் இல்லை. ரயில் நிலையம் எனக்குப் பிடித்த இடமாக இருந்தது. என்னைச்சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. அவர்கள் கூலி சுமப்பவர்கள். நான் அவர்களுக்குத் தலைவன் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

அங்கே 'கார்களை' நிறுத்தி வைப்பார்கள். அதற்குக் காவல் இருப்பேன். அதிலே எனக்கு வேண்டிய காசு கிடைத்தது. காசு சம்பாதித்தாலும் என்னை வீட்டில் சேர்க்க மறுத்துவிட்டார்கள். அதை ஒரு மதிப்புள்ள வாழ்க்கையாக அப்பா நினைக்கவில்லை.

நொண்டிக்கு வேறு என்ன மதிப்புக் கிடைக்கப் போகிறது. எதிர்பார்க்கவில்லை. அன்று என் தம்பியின் கார் அங்கு வந்து நின்றுவிட்டது; நான் ஒடியிருப்பேன்; அது என்னால் முடியவில்லை. அவனிடம் நெருங்கவில்லை. அவன் தன் மனைவியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

"உங்களுக்கு இது அவமானமாக இல்லையா?" என்று அவள் அவனைக் கேட்டாள்.

அதற்கப்புறம் அவனுக்கு ரோஷம் வந்து விட்டது. நான் நொண்டி நடப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் நேரே என்னிடம் வந்தான். பேச அவனுக்குச் சொற்கள் உதவவில்லை; ஓங்கி அறை கன்னத்தில் விட்டான்.

அவனுக்கு ஒரு படிப்பினையைக் கற்றுத் தர விரும்பினேன். நேரே அவளிடம் சென்றேன்.

"அம்மா! காசு கொடுங்கள்" என்றேன். அவள்முன் நான் ஒரு பிச்சைக்காரன் ஆனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/15&oldid=1461921" இலிருந்து மீள்விக்கப்பட்டது