பக்கம்:அரை மனிதன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

31



மேலும் தொடர்ந்தாள். 'வெளிச்சத்துக்கு வரும்பொழுது தான் கூச்சம் ஏற்படும். இதில் வேடிக்கை என்ன தெரியுமா? ஒரு மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்னால் நான் ஒருமுறை நிறுத்தப் பட்டேன். அவரை எப்பொழுதோ இதற்கு முன் பார்த்த நினைவு. அவரைப் பார்த்து நான் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நான் தலை கவிழ்க்கவில்லை. அவர் தலை கவிழ்த்துக் கொண்டே கேட்டார்.

'நீ விபச்சார விடுதியில் இருந்ததுண்டா?”

'அது விபசார விடுதி அல்ல; அங்கு வருகிறவர்கள் தான் அப்படி அதை ஆக்கி விடுகிறார்கள்' என்று அவருக்குப் பதில் சொன்னேன்.'

'வருகிறவர்களைக் கேட்கவில்லை. இருக்கிறவர் களைத்தான் கேட்கிறேன்'

'வருகிறவர்கள் இருக்கிறவர்கள் இருவரும் சேர்ந்தால் தானே அது நீங்கள் சொல்லும் விடுதியாகிறது' என்று சொன்னேன்.'

"அவர் அப்பொழுது என்னிடம் பேசியபோது நீங்கள் யார் என்று கேட்டது இல்லை. அவர் மட்டும் இப்பொழுது என் பெயர் தொழில் இதெல்லாம் விசாரித்தார்.”

'பிறகு அவரே முடிவுக்கு வந்தார். உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நல்ல பெண்ணாக இருக்கிறாய். இனிமேல் இந்தத் தவறு செய்யமாட்டாய் என்று நினைக்கிறேன் என்று கூறி விடுதலை தந்தார்.'

'நல்ல பெண்ணாக இருக்கிறாய் என்று சொல்லிவிட்டு இனிமேல் தவறு செய்யாதே என்று கூறுவதில் ஒருமுரண்பாடு இருப்பதை உணர்ந்தேன்.'

"வாழ்க்கை முரண்பாடு கொண்டதுதானே. அவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அறிந்து கொண்டேன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/33&oldid=1461941" இலிருந்து மீள்விக்கப்பட்டது