பக்கம்:அரை மனிதன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அரை மனிதன்


மேல் நிலையில் அவர்கள் பேச்சு எதை வாங்குவது; எதைப் பார்ப்பது: எதைச் சாப்பிடுவது என்பதைச் சுற்றிக் கொண்டு இருந்தது. எங்குப் பார்த்தாலும் கவர்ச்சி. புதுமை கொஞ்சி விளையாடியது. அவர்கள் வீட்டுக்கு ரகரகமான பெண்கள் வருவார்கள். 'ஹாய் ஊய்' என்று குரல் கொடுக்கும் கூட்டம் அது. தன் வீட்டில் பெண்கள் புடவை கட்டிப் பார்த்த பழக்கம். அங்கே பொதுவாகப் பெண்கள் புடவையே கட்டு வதில்லை. எல்லாம் 'பாண்டு' மாட்டிக் கொண்டிருந்தன. அவர்கள் முகத்தில் கவலை என்பதே தெரிந்ததில்லை. மயிர்முடியை வார வேண்டும் என்ற தேவைகூட ஏற்பட்டதில்லை. இங்கே அப்படி இல்லை. "உட்காரு உன் தலையிலே என்ன இவ்வளவு பேன்" என்று தலையிலே குட்டி உட்கார வைத்துத் தலை வாருவார்கள். அங்கே "பாப்" முடி வெட்டி நாய்முடிபோல அழகாகக் கத்திரிக்கப்பட்டிருந்தது. இங்கே பெண்கள் வாய் சிவக்க வேண்டுமானால் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ள வேண்டும். அங்கே இதழ்கள் மட்டும் சிவந்திருக்கும். வாய் சிவக்காது.

தங்கள் ஆடைக்குத் தரும் மதிப்பை அவர்கள் தம் தாய்மொழிக்கும் தந்தார்கள். அவ்வளவு குறைத்துக் கொண்டார்கள். எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு குறைத்துக் கொண்டார்கள். ஆங்கிலம்தான் அவர்கள் நாவுக்குப் பழக்கம். அது அவர்கள் ஆங்கிலப் பள்ளிகளில் ஆடவரோடு பழகும்பொழுது கற்றுக் கொண்ட ஆங்கிலம். எதையுமே அதிக சிரமம் இல்லாமல் எடுத்துக் கொள்ளும் கூட்டம் அது.

தேவதைகள் வந்து போவதுபோல அவனுக்கு முதலில் இருந்தது. முதலில் கொஞ்சம் கூச்சப்பட்டான். பிறகு அவர்கள் கூச்சப்படும்படி அதிகம் பழக ஆரம்பித்தான். அவனும் சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டான். கல்லூரியில் படித்தபோது அவனுக்கு எழுதப்படிக்க மட்டும் தெரியும். அவர்களிடம் பேசித்தான் ஆங்கிலமே கற்றுக் கொள்ள முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/86&oldid=1461983" இலிருந்து மீள்விக்கப்பட்டது