பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xxiii


இப்பெருமகனாரை முன்வைத்து இரெட்டியார் சமூகம் ஆண்டுதோறும் ஆறு ஆண்டுகளாக் ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் ஊர்வலத்தில் (47 தேரடித்தெருவில் ஸ்ரீராமாநுஜ கைங்கர்யசபை, என்ற பெயரில்) ஆறுநாள் ததியாராதனை நடத்திவருகின்றது. இங்ஙனமே காஞ்சியில் வரதராசர் பெருவிழாவில் (வைகாசியில்) ஆறு ஆண்டுகளாக கருட சேவையிலிருந்து எட்டுநாள் (82 மலையாளத் தெரு, விஷ்ணுகாஞ்சி) 'பேரருளாளர் பெருமாள் சபை' என்ற பெயரில் ததியாராதனை நடத்தி வருகின்றது. சாதி வேறுபாடு இன்றி எல்லோருக்கும் ததியாராதனை உண்டு. இங்ஙணம் பல்வேறுவகையில் கைங்கரியத்தைப் பிறவிப் பேறாக நடத்திவரும் இப் பெருமகனாருக்கு இந்நூலை அன்புப் படையலாக்கி என்வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்ளுகின்றேன். சிறந்த வைணவ அடியாராகிய இவர் ஆசியால் என் வைணவப்பணி மேலும் மேலும் வளர்ந்தோங்கும் என்ற நம்பிக்கை என்பால் உண்டு.

"என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய, அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி, (திருவாய் 7.9:1) என்னுளே நின்று இந்நூலை எழுத வழி காட்டினான் ஏழுமலையப்பன். அந்தப் பெருமான் 'வேங்கடம் மேவிய விளக்காக' என்னுள்ளே நிரந்தரமாக எழுந்தருளியிருந்து கொண்டு புகல் ஒன்று இல்லா அடியேனுக்கு எல்லா நலன்களையும் ஈந்தும் இந்நூல் வெளிவரவும் ஒரளவு அப்பெருமான் பொருளுதவிமாசெய்தும் உதவினான். திருவடிகளைப் போற்றிச் சரண் அடைகின்றேன்.

தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள்:
நீடிய உலகுஎலாம் அளந்து நீண்டதாள்:
ஓடிய சகடுஇற உழைத்து, பாம்பின்மேல்
ஆடியும் சிவந்ததாள்; என்னை ஆண்டதாள்.5

- வில்லிபுத்தூராழ்வார்

ந. சுப்புரெட்டியார்

வேங்கடம், AD-13 (மனை எண் 3354), அண்ணா நகர், சென்னை - 600 040

17-7-1994

_______________________________

5. வில்லிபந்தம் : நான்காம் போர்ச் சருக்கம் காப்பு.