பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் அருளிய தெய்வப் புலவர்

19


வியப்பு! கொங்கணன் என்னும் நம் பெயரை எவரும் அறியாரே! காட்டின் இடையே நம்தலையில் எச்சமிட்ட கொக்கை ஏறெடுத்துப் பார்த்தோம். அது எரிந்து சாம்பல் ஆயிற்று. அச்செய்தியை நாட்டில் எவரும் அறியார். ஆனால் இப்பெண் வீட்டில் இருந்த வண்ணம் எங்ஙனம் தெரிந்து வினவினாள்? இவள் தனது கற்பின் வல்லமையால் உணர்த்து ஓதியிருக்க வேண்டும்! இன்னும் இங்கு நின்றால் நம்மையும் தனது கற்பால் எரித்து விடக்கூடும்" என்று அஞ்சி நெஞ்சம் பதறினான். உடனே தான் வாழ்ந்த காட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

இவ்வரலாறு, வள்ளுவரது வாழ்க்கைச் சிறப்பையும், வாசுகியின் கற்பு மாண்பையும் விளக்குவது அன்றோ? இதைப் போன்ற பல வரலாறுகள் திருவள்ளுவருக்கு உலகத்தார் தந்த பெருமைக்குச் சின்னமாகத் திகழ்கின்றன.

அரசரின் அணுக்கச் செயலாளர்

தமிழ் நாட்டு அரசர்களிடம் அணுக்கச் செயலாளராகப்பணி புரிந்தவர்கள் 'வள்ளுவர்' என்று பெயர் பெற்றனர். அவர்கள் அமைச்சரைக் காட்டிலும் சிறந்தவர் ஆவர்.