பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த சமண் முனிவர்கள்

31


பிறவியில் அவனை நாடி அடைந்து விடும்' என்கிறார் ஒரு சமண முனிவர்.

அறிஞர் நட்பும் நல்லியல்பும்

‘தேவர்கள் வாழும் வானுலக வாழ்வு இன்பந் தருவதே, கூர்மையான நல்லறிவு கொண்டவர்கள், கேள்வி அறிவு நிரம்பியவர்கள் ஆகியோர் கூடியிருந்து உரையாடி மகிழ்வதால் அடையும் இன்பமே அவ்வானுலக இன்பத்தினும் மேலானது’ என்கிறார் ஒரு சமண முனிவர். ஒருவனுக்கு அமைய வேண்டிய நல்ல பண்புகளைப் பற்றிச் சொல்லுகிறார் ஒரு சமண முனிவர். ‘பிறர் பேசும் இரகசியங்களைக் கேட்பதில் செவிடனாக இருக்க வேண்டும். அயலான் மனைவியைக் காண்பதில் குருடனாக இருக்க வேண்டும். பிறர் மீது புறங்கூறுவதில் ஊமையாக இருக்கவேண்டும். இத்தகைய நல்லொழுக்கங்களை உடையவனுக்கு எந்த அறத்தையும் எடுத்துரைக்க வேண்டுவது இல்லை’ என்கிறார் அச்சமண முனிவர்.

‘பிறர் மறை மின்கட் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு’

என்பது அம்முனிவரின் அரிய பாடல் ஆகும்.