பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அறநூல் தந்த அறிவாளர்


என்றும் கூறுவர். பாணர் பாடும் பாட்டலுக்கு ஏற்றவாறு ஆடும் இயல்பு உடையார் விறலியர். தாமும் பாடிக் கொண்டு ஆடும் இயல்பு உடையார் பாடினியர் எனப்படுவர்.

ஒளவையார் துறவும் அமைச்சும்

ஔவையாரோ ஆடலிலும் பாடலிலும் வல்லவராக விளக்கினார். இளமையிலேயே தமிழ்ப் புலமை மிக்கவராகவும் விளங்கினார். அவருடைய அறிவும் திறமும் கண்ட ஆடவர், அவரை மணஞ் செய்து கொள்ள அஞ்சினர். அவரும் தமது புலமையை உலகிற்கு நன்கு பயன்படுத்த வேண்டும் என்று கருதினார். அதற்கு இல்லற வாழ்வு ஒரு தடையாக இருக்கும் என்று எண்ணினார். அதனால் இளமையிலேயே துறவுநெறி பூண்டார். தூய வாழ்வை மேற்கொண்டு ஒழுகினார். நல்லிசைப் புலமை மெல்லியலாராய் நாடு எங்கும் சுற்றி வந்தார். மன்னர்களையும் வள்ளல்களையும் தமது இன்னிசைப் பாக்களால் புகழ்ந்து பாடினார். அவர்கள் அன்புடன் வழங்கிய கொடையை, மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். இத்தகைய தமிழ்ச் செல்வியாகிய ஒளவையாரை அதியமான் தனக்கு அமைச்சராக ஏற்றுக் கொண்டான்.