பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நறுந்தொகை பாடிய நாவலர்

57


அதிவீரராமரின் அரிய புலமை

அதிவீரராமரின் சிறந்த புலமையை நறுந்தொகை நூல் ஒன்றே நன்றாக விளக்கும். இவர் ஏதேனும் ஒரு பொருளைச் சொல்ல நினைத்தால் கருத்துக்கள் வெள்ளம் போல் பெருகி வருகின்றன. 'எந்தப் பொருளும் தனது இயல்பில் என்றைக்கும் மாறாது;' இக்கருத்தை விளக்க முற்படும் அவர் உள்ளத்தில் எத்தனை உவமைகள் உதிக்கின்றன! அடுக்கடுக்காக வரும் அரிய கருத்துக்கள் அவரது ஆழமான அறிவைக் காட்டும். பசுவின் பாலை எவ்வளவு காய்ச்சினாலும் தன் சுவை குறைவதில்லை; பொன்னை நெருப்பில் இட்டு எவ்வளவு உருக்கினாலும் தன் ஒளி குன்றுவதில்லை; சந்தனத்தை எவ்வளவு அரைத்தாலும் தன்மணம் அறுவதில்லை; அகிலை எவ்வளவு புகைத்தாலும் தீய நாற்றம் எழுவதில்லை; சுடலை எவ்வளவு கலக்கினாலும் சேறு ஆவதில்லை! பேய்ச்சுரைக்காயைப் பாலில் இட்டுச் சமைத்தாலும் கசப்பு மாறுவதில்லை; உள்ளிக்குப் பல்வகை நறுமணத்தை ஊட்டினாலும் அது கமழ்வது இல்லை. இவ்வாறு தட்டுத் தடையின்றிக் கருத்துக்களைத் தந்து கொண்டிருக்கும் அவரது செந்தமிழ்ப் புலமை வியக்கத்தக்கது ஆகும்.