பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அறநூல் தந்த அறிவாளர்


அந்தாதித் தொடையில் அமைந்த முப்பது பாட்டுக்களைப் பாட வேண்டும். இவ்வாறு பாடப் பெறுவதே ‘நிரோட்டக யமக அந்தாதி’ என்று பெயர்பெறும். திருக்கோவிலை ஒரு முறை வலம் வருவதற்குள் இந்நூலைப் பாடி முடிக்க வேண்டும்.

சிலப்பிரகாசரின் வெற்றி

இத்தகைய நூலை முருகன் மீது இருவரும் பாடத் தொடங்கினர். சிவப்பிரகாசர், திருக்கோவிலை ஒருமுறை வலமாகச் சுற்றி வருவதற்குள் நூலைப் பாடி முடித்து விட்டார். வென்றிமாலைக் கவிராயரோ ஒரு பாடல் கூடப் பாட முடியாது தோல்வியுற்றார். ‘சிவப்பிரகாசருக்கு வென்றிமாலை அடிமை’ என்று கூறி, அவர் அடிகளில் விழுந்து பணிந்தார். சிவப்பிரகாசரோ, “எமக்குப் புலமையளித்த தம்பிரான் அடிகளைப் பணிவதற்கு எம்முடன் வருக” என்று அவரை அழைத்தார். சிந்து பூந்துறைத் திருமடத்திற்குக் கூட்டி வந்து வெள்ளியம்பலத் தம்பிரான் பாதங்களில் அவரை விழுந்து வணங்குமாறு செய்தார். அச்செயலைக் கண்ட தம்பிரான் பெருமகிழ்ச்சி கொண்டார். தம் மாணவரின் திறமையைப் பாராட்டி வாழ்த்தினார். பின்பு அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார்