பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

25



என்றால், இலட்சியவாதிகள் நம்மைப்பற்றி ஏளனமாகத் தானே கருதியிருப்பர். ஆனால் நம்மை ஏளனம் செய்தவர்கள் அறியார்கள், நாம் ஏற்படுத்திக்கொண்டிருந்த அந்தத் 'தொடர்பு', அரண்மனைக்கும், பார்ப்பனரல்லாதாரின் பெயரால் நிறுவப்பட்ட கட்சிக்கும் உள்ள 'தொடர்பை' சேலம் செய்ய என்ற சூட்சமத்தை. அந்தத் தொடர்பு இருந்த காலத்திலே நாம் நடத்திய அறப்போர் கண்டே தமிழகம் ஆச்சரியமுற்றது! இன்று? அந்தத் தொடர்பு' இல்லை!

அன்று நம்மிடமில்லாத அரிய திட்டங்கள், இன்று உள்ளன. அன்று அந்தத் தொடர்பைக் கண்டதால் நம்மிடம் சேர மறுத்த இளைஞர்கள் இன்று பலப்பல ஆயிரவர் பரணி பாடுகின்றனர்; படைவரிசையில் கூடுகின்றனர். அரண்மனைக்காரருக்கு ஒரு தீவிரத் திட்டம் தீட்டுவதென்றால் திகில்! கிளர்ச்சி என்றால் கிலி! போராட்டமென்றால் பீதி! காருண்யமிகுந்த சர்க்காருக்கு விநயமாக விஷயத்தைக் கூறிவந்த காலம்--அது மலை ஏறிப்போய்விட்டது. அந்தக் கறையை, தாலமுத்து நடராஜனின் இரத்தத்தைக் கொண்டு கழுவிச் சுத்தப்படுத்தியாகிவிட்டது! இப்போது நாம் மக்கள் மன்றம் அமைத்திருக்கிறோம்--மகத்தான போராட் டங்களை நடத்தும் மனப்பண்பும் தியாக உணர்ச்சியும் கொண்டதோர் அணிவகுப்பைத் தயாரித்திருக்கிறோம். எனவே, திருச்செங்கோட்டார், டில்லி உயர்தேவதையாகி விட்ட அளவு, காங்கிரசின் பலம் வளர்ந்துவிட்டது என்று வெளிக்குத் தெரியும். அதேபோது, கூர்ந்து நோக்கினால், ஆர அமர யோசித்தால், நமது பலம், வளர்ந்திருக்கும் அளவும் வகையும், ஜொலிப்பிலே, காங்கிரசைவிடக் குறைவு என்றபோதிலும், தாங்கும் சக்தியிலே, காங்கிரசைவிட அதிகம் என்பது நன்கு விளங்கும்.