பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

27



வைக்கும் 'பொருள்களை' வாங்கி உபயோகிக்கும் மார்க்கட்டாகவும் செய்வதுதான் என்பதை, இப்போது நமது கழகத்திலே மட்டுமல்ல, வேறு பல இடங்களிலே, வட்டாரங்களிலேயும் உணருகிறார்கள்--விசாரப்படுகிறார்கள்--ஒரு சிலர் வெளியே எடுத்துக்கூற வெட்கப்பட்டுக்கொண்டும் உள்ளனர்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் கால முதற்கொண்டு நேற்றுவரை, சீமைத் துரைமார்கள் எப்படி இந்திய பூபாகத்தைப் பட்டிக்காடாகவும்,பருத்தியை ஏற்றுமதி செய்து விட்டு ஆலை ஆடைகளை இறக்குமதி செய்யும் இளித்தவாயர் வாழும் இடமாகவும், புண்ணாக்கை அனுப்பிவிட்டு, சாக்லெட்டாக இறக்குமதி செய்து, ஆஹா! என்ன இனிமை! எவ்வளவு மணம்! என்று கூறிடும் இடமாகவும் அந்தப் பூபாகத்தை ஆக்கிவைத்தார்களோ, அதேபோல இப்போது வட நாட்டார், திராவிடத்தை நடத்தி வருகிறார்கள். இந்த உண்மை, மறைக்க முடியாத அளவுக்கு இன்று வெளிச்ச மாக்கப்பட்டுவிட்டது.

பெரியசாமித்தூரன்--மிகவும் அமைதியான உள்ளம் படைத்த காந்தீயவாதி---'ஈரோடு வாடைபட்டுக் கெட்டுப் போனவரல்ல'--அவினாசியாரின் ஆத்மார்த்த நண்பர்களிலே ஒருவராம்---அவர் நடத்தும் 'காலச்சக்கரம்' எனும் இதழில், வடநாட்டவரின் பொருளாதார ஏகாதிபத்தியத்தைப்பற்றிக் கட்டுரை வெளிவருகிறது என்றால், இந்த உண்மை, மறைக்க முடியாத அளவு வளர்ந்துவிட்டது என்றுதானே பொருள்.

"யுத்த காலத்திலே வெள்ளையர் சம்பந்தப்பட்ட கம்பெனிகளை ஆரம்பித்தால் அதிக சலுகைகள் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் சர். ஆர்தேஷிர்டலால் என்பவர்