பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

47



நாம் நமது லட்சியத்தை ஒரு அளவுக்கேனும் அடைந்திருக்கிறோம். நம் நாடு எதுவென்றாவது சொல்லத் தெரிந்துகொண்டுள்ளோம் நமது மக்களிடையே அளவிடற்கரிய புது உணர்ச்சியையும் காணப் பெறுகிறோம். இப்படிப்பட்ட காலத்திலா நாம் விட்டுக்கொடுப்போம் இல்லவே இல்லை!

இது மொழிப்போர் பட்டுமல்ல. கலாசாரப் போர். எனவே, அறவே விட்டுக்கொடுக்க முடியாது. ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கைப்பற்றுவதாயிருந்தால், ஒன்று படையெடுப்பின் மூலமோ, அல்லது வியாபாரத்தின் மூலமோ, அல்லது கலாசாரத்தின் மூலமோ---ஆகிய இம் மூன்று முறைகளின் மூலமேதான் கைப்பற்றவேண்டும். இவற்றுள் வடநாட்டினர் மூன்றாவது முறையாகிய, அதாவது கலாசாரத்தின் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றும் முறையை இத் திராவிட நாட்டில் கையாளத் துவங்கியுள்ளார்கள்.

கலாசாரப் படையெடுப்பு

ஹிந்தி நுழைப்பு கலாசாரப் படையெடுப்புதான். எனவே, இந்த நிலையில், திருக்குறளைப் பாராட்டிப் பேசுவதாலோ, அல்லது ஹிந்தியையும் தமிழையும் ஒப்பிட்டுத் தமிழன் சிறப்பை எடுத்துக் காட்டுவதாலோ பயனில்லை. பொன்னையும் பித்தளையையும் எவனாயினும் ஒப்பிட்டுப் பார்ப்பானா? இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். எனவே, நமது உயிரைப் பறிக்க வரும் ஹிந்தியை ஒழிக்க முன்வருவதல்லால், ஹிந்தியில் நீதி நூல் இல்லை, கலை இல்லை என்று கூறுவதெல்லாம் சந்தர்ப்பத்திற்கு அவசியமற்றவை.