பக்கம்:அறப்போர்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


பொருளையுடையது. ஆதலால் பாடாண் திணை என்ற புறத்திணையைச் சார்ந்தது. அரசனுடைய நல்லியல்புகளை எடுத்து மொழிந்தமையால் இயல் மொழி என்ற துறையில் அமைந்தது. 'அவன் "எம்உள்ளீர் எந்நாட்டீர்" என்றற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது' என்பது இப்பாட்டுக்குரிய பழங்குறிப்பு.

தமிழ்நாட்டில் வாழ்ந்த மன்னர்களும் செல்வர்களும் தாம் பெற்ற பொருளைப் பிறருக்கு ஈந்து இன்புற்றார்கள். குறிப்பறிந்து கொடுத்தார்கள். ஈவதால் வரும் புகழோடு வாழாத வாழ்வு சிறந்ததன்று என்பது அவர்கள் கொள்கை. பரிசிலர்கள் அத்தகைய புரவலர்கள் பால் சென்று இரத்தலை இழிவாகவே கருதுவதில்லை. தம்மிடத்தில் உள்ளதைச் சிறிதும் மறைக்காமல் கொடுக்கும் இயல்புடையவர்களிடத்தில் சென்று யாசிப்பதும், ஈவதைப் போன்ற சிறப்பையுடையது என்று எண்ணினார்கள்.

இரத்தலும் ஈதலே போலும், காத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

என்பது வள்ளுவர் வாய்மொழி.

ஈகை இல்லாத நாடு சிறந்த நாடு அன்று என்று எண்ணிய புலவர்கள் விண்ணுலகத்தையும் விரும்புவதில்லை என்று ஆவூர் மூலங்கிழார் கூறுகிறார்.

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/110&oldid=1391130" இலிருந்து மீள்விக்கப்பட்டது