இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மறப்பது எப்படி ?
அறஞ்செய் மாக்கள், புறங்காத்து ஓம்புநர்
நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர்தன் நாட்டுக்கு
இறைவனாகிப் பெருவிறல் வேந்தே
என்று இந்திரனைப் பார்த்து ஆபுத்திரன் கூறித் தேவலோகத்தைக் குறிப்பாக இகழ்ந்ததாக மணிமேகலையில் ஒரு செய்தி வருகிறது.
ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து
வாழ்வாரே வன்க ணவர்
என்பது ஒரு பழம் பாட்டு. இவை ஈகையின் சிறப்பை நேர்முகமாக அன்றிக் குறிப்பாகச் சொல்கின்றன.
மூலங்கிழார் கிள்ளிவளவனுடைய வீரத்தையும் பேராற்றலையும் ஈகையையும், அவன் புலவர்களைப் பாராட்டும் அன்பையும் நாட்டை வளப்படுத்தும் திறமையையும் இந்தப் பாட்டிலே புலப்படுத்தியிருக்கிறார். இது புறநானூற்றில் உள்ள 38-ஆவது பாட்டு.