லும் வராவிட்டாலும் அந்த நஞ்சினின்றும் தம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமே என்ற அச்சம் உண்டாயிற்று. சிவபிரானிடம் ஓடிவந்து ஓலம் இட்டனர். அவர்கள் உயிருக்கு உலைவைக்க வந்த அந்தக் கரிய நஞ்சை இறைவனார் உண்டு தம் திருக்கழுத்தில் தங்கும்படி அமைத்துக்கொண்டனர். தேவர்களின் ஆருயிரைக் காத்த பெருமை அவர் திருக்கழுத்துக்கு உரியது. அது கறுத்ததனால் தேவர்கள் உயிர் பெற்று ஒளிபெற்றனர். சிவபிரான் கழுத்தில் கறை நின்றமையால் அமரர் மனைவிமார் கழுத்தில் மாங்கல்யங்கள் நின்றன. ஆகவே அந்தக் கறை தேவரைக் காத்தது. தேவர்கள் தம் கடமையைச் செய்வதனால் உலகம் இயங்கி வருகிறது. ஆதலின் உலகத்தைக் காப்பதற்கும் அந்தக் கறை காரணமாயிற்று.
இத்தனை பெருமை உள்ள நீலகண்டத்தை அன்பர்கள் புகழ்கிறார்கள். வேதத்தைப் பல காலும் ஓதும் அந்தணர்கள் அக் கறையின் சிற்பபைச் சொல்கிறார்கள். வேதத்தில் ருத்திரம் என்ற பகுதியில் சிவபிரானுடைய பெருமை சொல்லப்படுகிறது. அங்கே அவருடைய நீலகண்டத்தின் புகழையும் காணலாம். மறையை நவிலும் அந்தணர் அப்பகுதியை