அறப்போர்
அவள் பாட்டோடு இழையும்படி பாடுவான். ஏழு சுரங்களுக்கும் தமிழில் தனித்தனிப் பேர் உண்டு. முதல் சுரமாகிய ஸட்ஜத்துக்குக் குரல் என்று பெயர். இயற்கையான குரல் எதுவோ அதுவே முதல் சுரமாதலின் அதற்குக் குரல் என்று பேர் வந்தது. பாணன் அவளுடைய குரல் எதுவோ அதற்கு ஏற்றபடி சுருதியைப் பொருத்திக் கூட்டிப் பாடுவான். குரலோடு புணர்ந்த சீரையுடைய கொளையில் (பாட்டில்) வல்ல பாண் மகன் அவன். அவனும் ஒரு பரிசு பெற்றான். அக்கால வழக்கப்படி அவன் பொன்னாலாகிய தாமரைப் பூவைப் பெற்றான். விளக்கமான தீயிலே உருக்கி ஆக்கப்பட்ட பொற்றாமரை அது; வெள்ளி நாரால் தொடுத்து அணிவது; ஒள்ளிய அழவிலே புரிந்த தாமரையின், வெள்ளிநாரால் கட்டப்பெறும் பூவை, இழைபெற்ற பாடினிக்குக் குரல் புணர்சீர்க் கொளையில் வல்ல பாண் மகன் பெற்றான்.
ஆக, சேரமான் பகைவர் புறம்பெற்றான்; புறம்பெற்ற மறத்தைப் பாடிய பாடினியோ இழைபெற்றாள். அந்தப் பாடினிக்குக் குரல் புணர்சீர்க் கொளையை வாசித்த பாண்மகன் பொற்றாமரையைப் பெற்றன்.
இப்படி அவரவர் பெற்றதைச் சொன்ன புலவரின் கருத்து யாது?