பக்கம்:அறவோர் மு. வ.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அறவோர் மு. வ.

அடைய முடியும். சிறுகதைகள் ஏதேனும் ஒரு பண்பு, வாழ்வின் ஒரு பகுதியில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி ஆகியவற்றை விளக்கியபோதிலும் அவற்றில் அமைகின்ற பாத்திரங்கள் மட்டும் படிப்போரின் நினைவை விட்டு அகலாதிருப் பின் அக்கதைகளில் பாத்திரப்படைப்பு சிறப்புப்பெற்றுத் திகழ்கிறது எனலாம். மு. வ. வின் சிறுகதைகளுள் வாழும் வழி, அந்த மனம் வருமா என்பவற்றில் வரும் தலைமை மாந்தர்கள் மு. வ. வின் வேறு வடிவத்தினராகத் தோன்றுகின்றனர். இவ்வாறு படைப்பாளர் தாமே ஒரு பாத்திரமாக அமைந்து சிறுகதையைச் சீரிய கலையுருவாக்க முடியும். இவரது பிற சிறுகதைகளில் அமையும் மாந்தர்கள் நடைமுறை மக்களின் படப்பிடிப்பாக அமைகின்றனர். காட்டாக 70 வயதுடைய அமாவாசையார் பாத்திரத்தைச் சுட்டலாம். நடப்பியல் நெறியில் நகைச்சுவையோடு பாத்திரத்தின் இயல்புகள், செயல்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் காட்டி மனத்தில் நிலைக்கும் பாத்திரமாக அவரைப் படைத்துள்ளார் மு. வ.

சில மாந்தர்கள் ஒப்பு - உறழ்வு (Parallelism and Contrast) நெறியில் படைக்கப்பட்டுள்ளனர். குறட்டை ஒலி சிறுகதையில் இத்தகு மாந்தர்கள் இடம் பெறுகின்றனர். மு. வ. வின் சிறுகதைகளில் பெண் மாந்தர்கள் மிகுதியாக இடம்பெறவில்லை. இரண்டு பெண்களின் உளவியல் கூறுகளைப் படிம உத்தியின் உதவியோடு விளங்கும் நிலையினை 'எவர் குற்றம்' கதையில் காண முடிகினறது. 'இயற்கை பொல்லாதது' என்னும் கதையில் கணவன், மனைவி ஆகிய இருபாத்திரங்களின் உளவியல் கூறுகளை அழகுற வெளிப்படுத்துகின்றார் மு. வ. பாத்திரப் படைப்பு என்னும் கலைக்கூறினையும் மு. வ. திறம்படச் செய்துள்ளார்.

நோக்குநிலை (Point of view)

கதையைக் கூறிச் செல்லும் முறையை நோக்குநிலை: என்பர், கதையைப் பாத்திரம் கூறல், கதையை ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/107&oldid=1224127" இலிருந்து மீள்விக்கப்பட்டது