பக்கம்:அறவோர் மு. வ.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

123

போதெல்லாம், என் தந்தையாரைப்போல் தமிழ்க் கொலை செய்கின்றவர் எவரும் இல்லை என்று எண்ணி வருந்துவேன். ‘றாமசாமி, நன்ராக, இருக்கிரார்கள், வன்து போறார், எண்று சொண்ணார்’ என்றெல்லாம் அவர் கடிதங்களில் எழுதியவற்றைக் கண்டு ஆத்திரம் கொள்வேன். அந்தக் காலத்துப் படிப்பு அவ்வளவுதான் போலும்’ என்று ஒருவாறு ஆத்திரம் அடங்குவேன்’

என்று குறிப்பிட்டிருப்பதைக் காணும் பொழுது தமிழைப் பிழையற எழுத வேண்டும் என்று அவர் காட்டிய ஆர்வம் புலனாகின்றது.

ஒரு முறை வகுப்பறையில் மொழி நூற் பாடத்தினை எங்கட்குப் பயிற்றி வந்தார்.

ஆயினும் தமிழ் நூற்கு அளவிலை...
ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று
அறையவும் நாணுவர் அறிவுடை யோரே

என்ற புலவர் ஒருவரின் - சுவாமிநாத தேசிகரின் பாட்டைச் சொல்லி, தமிழ் மண்ணிற் பிறந்து, தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒருவர் இப்படிச் சொல்லிப் போனாரே என்று துடித்துத் துடித்து மனம் மாழ்கினார்.

இந் நிகழ்ச்சி அவர்தம் மொழிப்பற்றினைக் காட்டும்.

சின்னஞ் சிறு குழந்தையர்க்கு என அவர் தொடக்க காலத்தில் எழுதிய கவிதைகளில் கருத்துவளம் இருப்பதனைக் காணலாம். மு. வ. வின் எழுத்துகள் என்றால் அவற்றில் வாழ்க்கையை வழிநடத்தி வளப்படுத்தும் கருத்துகள் தவறாது இருக்கும் என்று பின்னாளில் தமிழுலகு ஏற்றிப் பாராட்டியதற் கிணங்க, அடிநாளிலேயே தம் எழுத்தைச் சமுதாயப் பயன்பாட்டிற்கெனப் பயன்படுத்தியவர் மு. வ. அவர்களாவர். ஒரு பாட்டைப் பார்ப்போம் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/126&oldid=1238992" இலிருந்து மீள்விக்கப்பட்டது