பக்கம்:அறவோர் மு. வ.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

143

காலையுணவு இட்டலி, தோசையாகும். ஏழரைமணிக்கெல்லாம் காலைச் சிற்றுண்டி கொள்வார். மதியஉணவு ஒரு மணிக்கு. முருங்கைக்காய் சாம்பார், உருளைக் கிழங்கு, அப்பளப்பூ கடலைப்பருப்புக் கூட்டு; நெய் ஊற்றிய மிளகுக் குழம்பு. வாழைப்பூ வடை இவற்றை விரும்பி உண்பார். முருங்கைக்கீரை 'சூப்' குடிப்பார். மலை வாழைப்பழம், பப்பாளிப்பழம், சாத்துக்குடிப்பழம், திராட்சைப்பழம், ஆப்பிள்பழம் இவற்றை நாள்தோறும் தம் உணவில் சேர்த்துக் கொள்வார். பின்னாளில் - நாற்பத்தைந்து வயதிற்கு மேல் இரவில் சப்பாத்தி சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். இரவு உணவை எட்டு மணிக்கு உண்பார். சொற்பொழிவு, மற்ற பல நாட்களில் இந்த நேரம் மாறுவதும் உண்டு.

காப்பி குடிப்பதே இல்லை. குளிர் பானங்களும் குடிக்கமாட்டார்.

எப்போதும் என்ன மழையாக இருந்தாலும் குளிர்ந்த, நீரிலேயே குளிப்பார். காரில் பயணம் செல்லும்போது, காவிரி ஆற்றைக் கண்டால், காரிலிருந்து இறங்கிக் குளித்து விட்டே செல்வார். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் இரண்டாவது மாநாடு திருச்சியில் 1970-ல் நடைபெற்ற போது காவிரியாற்றுக்குக் காலை 5 மணிக்கே எழுந்து நண்பர் மாணவர் அணி ஒன்றனை அழைத்துச் சென்று குளித்து வந்ததனைப் பலரும் அறிவர். இதுபோன்றே இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்களின் நான்காவது மாநாடு 1972ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றபோது, காலையில் எழுந்து அப்பா அவர்கள் எங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு அரபிக்கடலுக்குச் சென்று குளித்து வந்ததனையும் இன்னும் நெஞ்சம் மறக்கவில்லை. திருச்சி நண்பர் இராசகோபாலன் வீட்டில் தங்கும்போதெல்லாம் காவிரி நீரில் குளித்து அகமகிழ். வதனை அம்மா அவர்கள் சொல்லிச் சொல்லி இன்றும். அகங்குழைவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/146&oldid=1239011" இலிருந்து மீள்விக்கப்பட்டது