பக்கம்:அறவோர் மு. வ.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IV



"தங்கைக்கு"-ஓர் ஆய்வு

டாக்டர் மு. வ. அவர்கள் நல்ல தூய சிந்தனையாளர். அவர் எழுதிய நூல்களைப் படிப்போர் அவர் அந்நூல்களில் தந்துள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் புதிய சிந்தனைகளை அவர்கள் முன்வைப்பார். ஆரவாரமற்ற அமைதி நடை. நுணுகி ஆராயும் மனம். எளிய தூய அறவாழ்வையே எழுத்தில் வற்புறுத்தும் திறம். தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் துடிப்பு அவர் எழுத்துகளில் எங்கும் காணலாம். காந்திய நெறிகளைப் போற்றி நிற்கும் போக்கும், தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் தம் வாழ்வில், எழுத்தில் காட்டிய எளிமையும் பொதுமையும் இவர் வாழ்விலும் படிந்திருந்தன.

மொழி, எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவி (Language is the vehicle of thoughts). கடிதங்கள் வாயிலாக ஒருவர் தம் மனத்தில் முகிழ்க்கும் எண்ணங்களை மற்றவர்க்குப் புலப்படுத்தும் போக்கு தொன்று தொட்டே இருந்து வருவது ஆகும். நேரு, மறைமலையடிகளார், சீனிவாச சாஸ்திரி, அறிஞர் அண்ணா முதலானோர் மகளுக்கோ, தம்பிக்கோ என்று தாம் கூற வந்த கருத்துகளை அவர்களுக்குக் கூறுவது போன்று சமுதாயத்திற்கெனக் கடித இலக்கிய வாயிலாகப் புலப்படுத்தினர்.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/152&oldid=1239018" இலிருந்து மீள்விக்கப்பட்டது