பக்கம்:அறவோர் மு. வ.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 103

மு. வ. அவர்கள். தம் நூலில் பழமொழிகளைக் கையாண்டு தாம் கூறவந்த கருத்துகளை அரண் செய்துள்ளார். அவர் இந்நூலில் ஏழு திருக்குறள்களை எடுத்தாண்டுள்ளது போன்றே ஏழு பழமொழிகளை எடுத்தாண்டுள்ளார். அவை வருமாறு :

’புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும்’48

’பழகப் பழகப் பாலும் புளிக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்’49

’பூசணிக்காய் போகுமிடம் புலம் தெரியாது

கடுகு போகுமிடத்திற்குத் தடிகொண்டு திரிந்தானாம்’50

’சுண்டைக்காய் கால் பணம் சுமைக் கூலி முக்கால் பணம்’51

’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’52

’பொறுத்தவர் பூமி ஆள்வர்’53

’கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’54

கண்ணகியின் நிறையும் குறையும்

இலக்கியமே வாழ்வெனக் கொண்ட மு. வ. அவர்கள் இளங்கோவடிகள் இயற்றிய சீர்சால் சிலப்பதிகாரக் காப்பியத்தில் நெஞ்சம் தோய்ந்து ஈடுபட்டவராவர். கண்ணகியின் நிறையினைப் பின்வருமாறு பாராட்டுகின்றார்:

நீ யார் மரபில் வந்தவள் என்று எண்ணிப் பார். கணவனுடைய தவறான வாழ்க்கையைக் கடிந்து கூறாமல், வெறுத்துப் பகைக்காமல், பல ஆண்டுகள் பொறுத்திருந்த கண்ணகியின் மரபில் வந்தவள் நீ. கண்ணகி சில நாட்கள் பொறுக்கவில்லை; சில ஆண்டுகள் பொறுக்கவில்லை; பல ஆண்டுகள் பொறுத்த பெருமனம் படைத்தவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/166&oldid=1462067" இலிருந்து மீள்விக்கப்பட்டது