பக்கம்:அறவோர் மு. வ.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164 அறவோர் மு. வ.

கணவன் தவற்றை அவள் மறக்கவில்லை; அஞ்சி அடங்கி விடவில்லை. பெருமனத்தோடு பொறுத்திருந்தாள். அதைக் கடிந்து கூறுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருந்தாள். கணவனே மனம் மாறி இரங்கும் நிலை வரும் வரையில் காத்திருந்தாள். அந்த நிலை வந்ததும், போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனக் கடிந்துரைத்தாள். இத்தகைய பெருமனம் இருந்த காரணத் தால்தான், ஒரு துறவியின் உள்ளத்தில் கோயில் கொள்ள முடிந்தது; அங்கிருந்து ஒரு காவியக் கோயிலில் வாழவும் முடிந்தது.”55

”மனித மனம் இப்படித் தியாகம் செய்பவர்களையே என்றும் விரும்பும். அது இயற்கை. எவ்வளவு உரிமை நாட்டம் உடையவனாக இருந்தாலும், ஒரு வியாபாரி தனக்கு இயைந்து நடப்பவனையே கணக்குப்பிள்ளையாக வைத்துக் கொள்ள விரும்புகிறான். எவ்வளவு முற்போக்கு உடையவனாக இருந்தாலும், ஒரு பத்திரிகை ஆசிரியன் தனக்காகத் தியாகம் செய்யக் கூடியவனையே துணையாசிரியனாக வைத்துக் கொள்ள விரும்புகிறான். எவ்வளவு சீர்திருத்தக்காரனாக இருந்தாலும், ஓர் அரசியல் தலைவன் தனக்காகச் சொந்தக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கக் கூடியவனையே தன் செயலாளனாக வைத்துக் கொள்ள விரும்புகிறான். இவ்வாறே ஒவ்வொரு துறையிலும் மனிதன் தனக்குத் துணையாக ஒருவனை நாடும்போது, கண்ணகி போன்ற மனம் உடையவனையே நாடுகின்றான். இந்த மனப்பான்மை என்றும் இருக்கும்; உலகம் எவ்வளவு மாறினாலும் அதன் பிறகும் இருக்கும். அதனால் அன்றும். கண்ணகியின் சிறப்பு எல்லோராலும் போற்றப்படும்.”56


கண்ணகியின் குறையோ என ஆயும் போக்கினைப். பின்வரும் வரிகளில் காணலாம்:

“ஆகையால் வாழ வழி நாடுகின்றவர்கள் எப்போதும், விதிவிலக்குகளை எடுத்துக்காட்டாகக் கொள்ளக்கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/167&oldid=1462068" இலிருந்து மீள்விக்கப்பட்டது