பக்கம்:அறவோர் மு. வ.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

171

மக்களோடும் நேயங்கொண்டும் நெருங்கியும் பழகியவர். தம் கூர்த்த நோக்காலும் மதியாலும் தம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை நுணுகிக் கண்டவர். தாம் கண்டவற்றையும் தாம் கண்டபோது தம் உள்ளம் உணர்ந்தவற்றையும் அவர் தம்முடைய நாவல்கள் அனைத்திலும் பிரதிபலித்துக் காட்டியுள்ளார். புரையோடிப் போன சமுதாயத்தை மட்டும் நாவலாசிரியர் சிலர் நமக்குத் தெற்றெனக் காட்டி விட்டு வாளா விட்டு விடுவர். ஆனால் மு. வ. போன்ற நாவலாசிரியர் அத்தோடு நின்று விடுவதில்லை. சமுதாயப் புண்ணிற்கு மருந்திடும் சமுதாய மருத்துவராய்த் துலங்கினர். தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களோடு நெருங்கிய தொடர்பு பூண்டிருந்தவர் தண்டமிழ்ச் சான்றோர் மு. வ. ஆவர். திரு. வி. க. அவர்கள் எப்படித் தம் உரைநடைத் திறத்தால் சமுதாயப் பிணி தீர்க்கும் பெருந்தகை மருத்துவராக விளங்கினாரோ அம்முறையிலேயே மு. வ. அவர்களும் தம் பேச்சால் எழுத்தால் சமுதாயப் படப்பிடிப்போடு நின்று விடாமல் சமுதாய நோய்களை இனங்கண்டு காட்டி அவற்றைத் தீர்க்கும். தேர்ந்த மருத்துவ மேதையாக விளங்கினார் எனலாம். 'நோய் நாடி, நோய் தணிக்கும் வாய் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்தவர்' மு. வ. ஆவர்.

'உலகப் பேரேடு' என்னும் கட்டுரை நூலில் மு. வ. அவர்கள் சமுதாயத்தைப் பற்றித் தாம் கொண்டுள்ள கருத்தினைப் பின்வருமாறு குறிப்பிடுவர்:

"மனித சமுதாயம் ஒரு குழந்தை போல் வளர்ந்து வருகிறது; இன்னும் ஒரு குழந்தையின் நிலையிலேயே இருக்கிறது. இந்தக் குழந்தைக்கு இப்போது வயது நான்கு என்று சொல்வதா, ஐந்து என்று சொல்வதா தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் வளர்ந்துவந்த பிறகும், இன்னும் சமுதாயம் குழந்தை நிலையிலேயே இருப்பதை எண்ணி வியப்புத் தோன்றுகிறது."
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/180&oldid=1239567" இலிருந்து மீள்விக்கப்பட்டது