பக்கம்:அறவோர் மு. வ.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

அறவோர் மு. வ.

'உள்ளம் திருந்தினால் உலகம் திருந்தும்' என்பது மு. வ. வின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவேதான் அவர் சொல்கிறார்: "எல்லாரும் உலகத்தைத் திருத்த முயல்கிறார்கள். உள்ளத்தைத் திருத்த அவ்வளவு முயற்சி செய்வதில்லை செய்ய முடிந்ததைச் செய்யாமல் முடியாததற்காக உழைத்துச் சலிப்பும் வெறுப்பும் அடைகிறார்கள்" என்று குறிப்பிட்டு விட்டு 'அந்த நாள்’ என்னும் தம் தொடக்க கால நாவலில் மனத்தின் சிறப்பினையும் அதனைப் பண்படுத்த வேண்டும் என்ற கடப்பாட்டினையும் தம் இலக்கிய நெஞ்சம் விளங்கப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்:

"மனம் ஒரு பெரிய உலகம்; அந்த மன உலகில் அந்தியின் அழகும் உண்டு; காலையின் கவர்ச்சியும் உண்டு; நள்ளிரவின் குளிர் மயக்கமும் உண்டு; நண்பகலின் கொதிப்பும் உண்டு. அந்த மன உலகில் கருமுகில்களும் உண்டு. ஆழ்ந்த கடல்களும் உண்டு. அந்த மன உலகில் வெயில் பரப்பும் கதிரவனும் உண்டு; வெண்ணிலாப் பொழியும் திங்களும் உண்டு; வெப்பமும் உண்டு; தட்பமும் உண்டு; மழையும் உண்டு; பனியும் உண்டு; வளமும் உண்டு; வறட்சியும் உண்டு. அந்த மன உலகை அல்லவா காண வேண்டும்; ஆராய வேண்டும்; பாட வேண்டும்; பண்படுத்த வேண்டும்.”

இவ்வாறு உள்ளத்தின் சிறப்பை உணர்ந்த காரணத்தால் அவர் கூறுகிறார்:

"நாம் வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்க வேண்டும். ஒன்று நம் உள்ளம். மற்றொன்று உடம்பு மூன்றாவது சுற்றுப்புறம். நாம் விரும்பினால் உள்ளத்தை முழுதும் நன்றாக வைத்திருக்க முடியும்; ஆனால் எல்லாரும் சேர்ந்து விரும்பினால்தான் சுற்றுப்புறத்தை நன்றாக அமைக்க முடியும்."
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/181&oldid=1239569" இலிருந்து மீள்விக்கப்பட்டது