பக்கம்:அறவோர் மு. வ.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

189

அவர்களின் சொந்த ஊர். ஆயினும் இவர் பிறந்து வளர்ந்து பணியாற்றிய ஊர் திருப்பத்தூராகும். 1912 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 25 ஆம் நாள் பிறந்தவர் நம் பேராசிரியர். அவர்களின் தாயார் பெயர் அம்மாக் கண்ணு. தந்தையார் பெயர் முனிசாமி என்பது ஆகும். பிறவியிலேயே மெலிந்த உடம்பு. ஊரில் நல்ல செல்வாக்குப் படைத்த பெருந்தனக்காரரின் ஒரே மகன். செல்லங் கொடுத்துச் சீராட்டிப் போற்றி வளர்க்கப் பாட்டியார். இவ்வாறு இளமைப் பருவம் கழிகின்ற காலையில் 'நவசக்தி’ என்னும் வார ஏடு அவர் கண்ணிற் பட்டது. தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் நடத்திய அத் தமிழ் ஏடு, இவர் தம் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை உண்டு பண்ணிற்று எனலாம். அவ் வேட்டின் தமிழ் நடையில் இவர் நெஞ்சம் திளைத்தார்; கருத்துகளில் மூழ்கினார்; அழகு தமிழில் அகங்குளிர்ந்தார். விருந்துண்ட மகிழ்ச்சி இவருக்கு ஏற்பட்டது. விடாது அவ்வேட்டினை வாங்கிப் படிக்கும் பழக்கம் வந்து வாய்த்தது. அவ்வேட்டில் இடம் பெற்ற கட்டுரைகளில் மேற்கோளாக எடுத்தாளப் பெற்றிருந்த தமிழ்ப் பாடல்களை மனப் பாடம் செய்யத் தொடங்கினார். இதனால் தமிழார்வமும், நல்ல தமிழ் படிக்கும் பழக்கமும் இவரிடம் வந்து படிந்தன.

இவருக்கு அப்போது பதின்மூன்று வயது நடந்து கொண்டிருந்தது. வகுப்புத் தோழன் ஒருவன், எங்கும் கிடைக்காத நூலென்று - யாப்பிலக்கண நூலொன் றினை இவரிடம் காட்டினான். அந் நூலில் செய்யுள் இயற்றும் வகை கூறப்பட்டிருப்பதறிந்து களிப்புக் கொண்டார். ஏற்கெனவே செய்யுள் இயற்ற வேண்டும் என்று ஆர்வங்கொண்டிருந்த இவருக்கு அந் நூல் நல்ல விருந்தினை நல்கியது. யாப்பிலக்கணத்தை வரையறை செய்த அந்நூலே 'யாப்பருங்கலக் காரிகை' எனப்படுவது. அந் நூலினை அந்நண்பனிடம் கெஞ்சிக் கேட்டு, இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/192&oldid=1224397" இலிருந்து மீள்விக்கப்பட்டது