பக்கம்:அறவோர் மு. வ.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

191

உணவுப் பொறுப்பு அம்மாவுடையதும், அதற்கு முன்னும் பின்னும் நெஞ்சத்திற்கு உணவு ஊட்டுவது நம் பேராசிரியருடையதுமாக ஆயிற்று. கல்லூரியில் ஏட்டுக் கல்வி பெற்ற மாணவர் சிலர், இவர் வீட்டில் வாழ்க்கைக் கல்வியை - கல்வியுணர்வை - பண்பாட்டுக் கல்வியைக் கற்றனர். அவ்வாறு கற்றவர்களில் பலர் இன்று வாழ்வில் பல்வேறு துறைகளில் புகழ் பூத்து விளங்குகிறார்கள்.

டாக்டர் மு.வ. அவர்கள் கடும் உழைப்பாளி. எந்நேரமும் அவர்கள் படித்துக்கொண்டோ அல்லது வருபவர்களிடம் சுருங்க - பெருக உரையாடிக்கொண்டோ இருப்பார்கள். சிந்தனையில் தனித்து மூழ்கிவிடுவார்கள். இதன் விளைவாக நூல்கள் எழுதத் தொடங்கினார்கள். 'செந்தாமரை' வெளி வந்தது. பின்னர், 'கள்ளோ காவியமோ' வெளிவந்தது. தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர் பலரை இவர் தம் நீங்காத வாசகர்களாக (Readers) இந் நூல்கள் ஆக்கின.

இரு கண்கள்

இதற்கிடையில் மொழியியல் ஆராய்ச்சி செய்து 'வினைச் சொற்கள்' பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையெழுதி எம். ஓ. எல். பட்டமும், இலக்கிய ஆராய்ச்சி மேற்கொண்டு 'பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' (The Treatment of Nature in Ancient Literature) என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையினை எழுதி 'டாக்டர்' (Ph.D.) பட்டமும் பெற்றார்.

சிறப்புகள் சேர்ந்தன

நூல்கள் பல்துறைகளிலும் பல்கிப் பெருகின. நாவல்கள் படிப்போர் நெஞ்சங்களைக் கவர்ந்தன. அதிகப் படிகள் விற்கும் நூல் இவருடையதே என்ற நிலை ஏறத்தாழப் பத்தாண்டுக்காலம் (1951 - 1960) நிலவியது. நாளும் நாளும் பட்டிதொட்டிகளிலும் இவருடைய நூல்களைப் படிப்போர் தொகை பெருகிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/194&oldid=1224408" இலிருந்து மீள்விக்கப்பட்டது